மனம் குறித்து..

 

முதல் ஐந்து புலன்களுக்கு தனித்தியங்கும் ஆற்றல் கிடையாது. மனம் எனும் ஆறாம் புலன் முதல் ஐந்தில் ஏதேனுமொன்றுடன் இணைந்து செயல்படுகையில் அனுபவம் உண்டாகிறது. உதாரணம் நாக்குடன் மனம் சேர்ந்து சுவை எனும் அனுபவத்தை உருவாக்கும். போலவே கண்ணுடன் சேர்ந்து காட்சி எனும் அனுபவத்தை.
மனம் அதில் லயிக்காமல் நம் புலன் செய்யும் எச்செயலும் அனுபவமாவதில்லை. வெறுமனே செயலாக மட்டுமே நிகழ்கிறது. மேலும் ஒரு தருணத்தில் ஒரு அனுபவம் மட்டுமே நிகழ சாத்தியம் உண்டு. உதாரணமாக நாம் பிரியாணி சாப்பிடும் போது காட்சி இன்பம், நுகர்ச்சி இன்பம், சுவை இன்பம் என இவற்றில் ஒரு நேரத்தில் ஒன்று மட்டுமே நாம் உணர்வோம். சுவையில் லயித்தால் மணம் தெரியாது. மணத்தில் இருந்தால் சுவை தெரியாது.
அனுபவங்கள் நினைவுகளாக நம் மூளையில் சேர்கிறது. நல்லது கெட்டது எனும் இரு அனுபவங்களும் மூளையில்  வெறும் நினைவுகள் மட்டுமே. எனில் மூளை அதை எப்படி வேறுபடுத்தி உணர்கிறது..? உணர்ச்சிகளாக. ஒவ்வொரு அனுபவமும் ஒரு உணர்ச்சியோடு தொடர்புடையது. உதாரணமாக ஒரு நல்ல அனுபவம் நமக்குள் மகிழ்ச்சியை உருவாக்குகிறது. மற்றொரு தீய அனுபவம் நமக்குள் சலிப்பை உருவாக்குகிறது. மகிழ்ச்சி, துயரம், அவமானம், அருவருப்பு, பெருமிதம், வெறுப்பு என ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு உணர்ச்சிகளை நமக்குள் உருவாக்குகின்றன. உணர்ச்சிகள் இல்லாத வெறுமையான அனுபவங்களும் உண்டு.
அனுபவங்கள் நினைவுகளாக மூளையில் சேகரமாகும் போது அதன்போது நாமடைந்த உணர்ச்சியும் அதனுடன் பதிகிறது.

மனத்தின் செயல்பாடு என்பது, புலன்களின் செயல்களை எண்ணங்களாக்கி அதை முந்தைய அனுபவங்களுடன் ஒப்பிட்டு ஆய்வது. மற்றும் தொடர்புடைய பிற அனுபவங்களையும் சங்கிலி தொடர்போல கிளர்த்திக் கொண்டே செல்வது. இந்த தொடர் இயக்கம் தான் மனம் என்பதன் இருப்பு. மனத்தின் இந்த செயல்பாட்டில் நினைவுகள் ஆராயப்படும்போது அதனோடு தொடர்புடைய உணர்ச்சிகளும் வெளிப்பட்டு நம்முள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக நாம் இருட்டைப்பார்க்கையில் நம் மனம் இருட்டு சார்ந்த நம் நினைவுகளை கிளருகின்றன. அதனோடு தொடர்புடைய பிற பதிவுகளும் கிளறப்பட்டு பயம் எனும் உணர்ச்சி வெளிப்படுகிறது. உணர்ச்சிக்கு ஏற்ப நமக்குள் உயிரியல் செயல்பாடுகள் நிகழ்கின்றன.

ஆக்கப்பூர்வமான செயல்கள் மீது தன்னிச்சையான ஆர்வம் வராதிருக்க இதுதான் காரணம். ஆக்கப்பூர்வமான காரியங்கள் தொடர்பான அனுவங்கள் பெரும்பாலும் வலியும் சலிப்பும் கொண்டதாகவே நம்முள் பதிந்திருக்கும். கடினமான இந்த பாதையை எண்ணங்கள் எப்போதும் புறக்கணிக்கிறது. மனம் தான் இயங்க இலகுவான அல்லது இன்பமான பாதையையே நாடும். புலனின்ப செயல்கள் நம்முள் கிளர்ச்சியான நினைவுகளாக சேர்ந்திருக்கும். காரணம் இந்த செயல்பாடுகள் நம் உடலின் டோபமைன்  சுரப்பால் மகிழ்வான ஒரு நினைவாக பதிந்திருக்கும். டிவி பார்ப்பதா அல்லது படிப்பதா எனும் கேள்வி ஒரு மாணவனுக்குள் வந்ததும் இயல்பாக மனம் டிவியை தேர்ந்தெடுக்கும். காரணம் டிவி பார்த்த முந்தைய அனுபவங்கள் மகிழ்ச்சி எனும் உணர்ச்சியோடு  இணைந்து சேகரிக்கப்பட்டிருக்கும்.

ஆக நம் உள்ளத்திற்கு மகிழ்ச்சி நல்காத எந்த செயலையும் நம் தேர்ந்தெடுப்பது கடினம். எனில் இதற்கு என்னதான் வழி?

1. புத்தி : இது மனம் போல வெறும் உணர்ச்சிகள் சார்ந்து இயங்குவது அல்ல. தர்க்கம் சார்ந்தது. நம் ஒவ்வொரு செயலிலும் மனம் தாந்தோன்றியாக செயல்படுவதைத் தடுத்து புத்தியின் இருப்பை உறுதி செய்யல் வேண்டும். இதையே விழிப்புணர்வோடு இருத்தல் என்கிறோம். மனம் புத்தியுடன் இணைந்திருக்கையில் விழிப்போடு இருக்கிறது. புலன்-மனம்-புத்தி மூன்றும் லயிக்கும் செயல் ஒரு திருப்தியான உணர்ச்சியோடு இணைந்த அனுபவமாக நம்முள் பதிவாகிறது. வெற்று உணர்ச்சிகளால் அல்லாது நம் ஒவ்வொரு எண்ணமும் தர்க்கரீதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. நல்ல எண்ணங்கள் நல்ல சிந்தனைக்கு அடிகோலுகிறது. குறிப்பாக புத்தியின் அருகாமையில் மனம் அலைச்சலற்று சீரான வழியில் செயல்படுகிறது. இதனால் தேவையற்ற எண்ணங்கள் குறைவதுடன் மன ஆற்றலும் மிச்சமாகிறது. மன ஆற்றல் பெருகும் தோறும் மனம் தர்க்க ரீதியில் வலிமையாக மாறுகிறது.

2. ஆக்கப்பூர்வமான செயல்களை நல்ல உணர்ச்சிகளோடு இணையுங்கள். அதாவது சலிப்புடனும், வெறுப்புடனும், கடுப்புடனும், மேலோட்டமாகவும் எந்த ஆக்கப்பூர்வ செயலையும் செய்யக்கூடாது. இது ஒரு எளியவழி. எத்தனை பிடிக்காத செயலாயினும் செய்ய வேண்டிய செயலை ரசித்து மகிழ்வுடனும் ஈடுபாட்டுடனும் முழுமையாகச் செய்தல் வேண்டும். அது தரும் திருப்தியை, நிறைவைக் கொண்டாட வேண்டும். அதை நினைத்து நினைத்து பெருக்கிக் கொள்ள வேண்டும். நிறைவாக ஒரு செயலை முடிக்கும் போது ஏற்படும் திருப்தி நம்முள் ஏராளமான டோபமைன் சுரப்பைத் தூண்டவல்லது. அத்தகைய மகிழ்ச்சியுடன் ஒரு ஆக்கப்பூர்வ செயல் நம்முள் பதியும்போது நம் முயர்ச்சி இல்லாமாலேயே நாம் அதில் இயல்பாக ஈடுபடுவோம். அது மேலும் நிறைவான செயல்களுக்கு வழிகோலும். மேலும் டோபமைன். ஒருகட்டத்தில் நாம் ஆக்கப்பூர்வ செயல்களுக்கு அடிமையாவோம். சலிப்பின்றி அதில் ஆண்டுக்கணக்கிலும் ஈடுபடுவோம்.

3. அற்ப புலனின்ப செயல்களை ஒருத்தல் அவசியம். வெளிப்படையாக நாம் அதைச் செய்யவேண்டும். இதனால் அர்த்தமற்ற செயல்கள் வெறும் கிளர்ச்சிக்காக நம்முள் பதிந்து நம் முறையான மன செயல்பாட்டைச் சிதறடிக்கும். நம் எண்ணங்களும் பிரௌனியன் இயக்கத்தில் ஏராளமான மன ஆற்றல் விரயத்திற்கு வழிகோலும். ஆக புலனின்பத்திற்கு மட்டுமே செய்யும், மனத்தை உள்ளிழுக்காத, புத்தியால் மறுக்கப்பட்ட செயல்களை வெறுத்து ஒதுக்குக.


3/2/2021

தருமபுரி



Comments

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்