Posts

Showing posts from February, 2018

தவறுகளின் பொது வரலாறு

முதலில்அந்த தவறு, தவறு என்று தெரியாமல் யாராலோ தவறுதலாகத்தான் செய்யப்பட்டது.. பின்பு ஒரு நாள், யாரோ ஒருவன் அதற்க்கு தவறு என்று பெயரிட்டான். பெயரை அதன் மீதே எழுதியும் வைத்தான் பின்னர் அது வெகுநாட்களாய் தவறு என்ற பெயருடனேயே எல்லோராலும் செய்யப்பட்டு வரலானது. ஊருக்கு புதியவன் யாரேனும் ஒருவன் அதன் மீது எழுதப்பட்ட பெயரை உரக்க படித்துவிடுவது மட்டுமே சங்கடமாய் இருந்தது. ஒருவழியாய் தவறு எனும் பெயர்மீது பழுப்பு காகிதம் ஒட்டி பயன்படுத்தும் முறை பரவலானது. பழுப்புக் காகிதத்தை எவனும் கிழிக்காதிருக்க பாதுகாப்பும் போடப்பட்டபின் எல்லாம் இயல்பானது. பழுப்பு காகிதத்தின் உள்ளே என்ன உள்ளதென்று பாடங்கள் பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதுடன் தவறுக்கு பெயரிட்டவனின் வாழ்க்கை வரலாறும் விரிவாக கற்ப்பிக்கப்பட்டது. பாவம், முதன் முதலில் அதை செய்தவன் மட்டுமே அது தவறு என்று தெரியும் முன்னரே தவறிவிட்டான்..

சிறிது வெளிச்சம்

ஒரு சிறு அக்கறைப் பார்வை ஒற்றைப் புன்னகை மெல்லிதாய் ஒரு ஸ்பரிசம் நம்பிக்கையாய் முதுகில் ஒரு தட்டு ஒரு சிறிய அன்பின் விசாரிப்பு ஒற்றை வார்த்தையில் ஒரு வாழ்த்து ஓரிரு வரிகளில் சிறு பிரார்த்தனை விழியோரம் கசியும் சிலதுளி கண்ணீர் அன்பின் ஊற்று எத்துனைச் சிறிதானால் என்ன? இருண்ட கண்களில் புதிய உலககத்தைக் காட்டிவிடும் அன்பினால் கசிந்திடும் சிறிது வெளிச்சம்..

Missing 3

வண்டியைத் தள்ளி நடைபயிலும் குழந்தையாய் உன் நினைவுகளின் பிடி தளர்ந்தால் தடுமாறிப் போகிறது மனம்

Missing 2

மழை பார்த்தேன் மழையை மட்டும்.. வெயில் பார்த்தேன்  வெயிலை மட்டும்.. இரண்டும் சேர்த்துப் பார்க்கையில் உடன் நீயும் தெரிகிறாய்..

Missing 1

பிரிய நினைக்கையில் காற்றாகிறாய் பிடிக்க நினைக்கையில் நிழலாகிறாய் சோர்ந்து அமர்கையில் சூடான கண்ணீராய் கன்னத்தில் வழிகிறாய்

தேடல்

Image
ஏதுமற்ற இந்த இருண்ட பாழ் வெளியில் ஒரு பைத்தியத்தின் தீவிரத்துடன் பலகாலமாய்த் தேடிக் கொண்டிருக்கிறேன், அறுந்த என் தொப்புள் கொடியின் நுனியை.. என்றானும் ஒருதினம் மீண்டும் என் கருப்பைக்கே திரும்பிவிடலாம் எனும் பேராசையுடன்

அனிதாவும் கோரக்பூர் குழந்தைகளும்

Image
அனிதா இறந்தது NEET தேர்வினால் அல்ல.. எனத் தொடங்கி உரத்துப் பேசுகிறான் ஒருவன் அனிதாவால் NEET ல் மதிப்பெண் வாங்க முடியவில்லை.. அந்த விரக்தியில் தன்னை மாய்த்துக் கொண்டாள் எனத் தர்க்கப் பூர்வமாக நிறுவிவிட்டதாக நினைக்கிறான்.. அந்த மகிழ்ச்சி அவன் குரலில் ஒளிர்கிறது.. பெருமையில் அவன் தோள்கள் விம்முகிறது.. 'இனெபிலிட்டி..!' எனும் வார்த்தையை சத்தமாகக் கூறி தன் வாதத்தை நிறைவு செய்கிறான்.. மக்கள் கை தட்டுகின்றனர் கூட்டத்தோடு அமர்ந்திருந்த என் மனத்தில் பதட்டம் சூழ்கிறது.. பொழுதுபோக்குக்கென நடக்கும் இந்த வாத நிகழ்ச்சியில் அடுத்து அவன் கோரக்பூர் குழந்தைகள் இறப்பைப் பேசுவான்.. குழந்தைகள் செத்தது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அல்ல அவைகளால் சுவாசிக்க முடியாததால்.. இனெபிலிட்டி என்று நிறுவுவான்.. மக்களும் கைத் தட்டுவர்..

அங்கு எல்லாமும் அப்படித்தான் செய்கின்றன

Image
மௌனமும் இருளும் அழுத்தும் அந்த வனாந்திரத்தில் திசைகள் தெரியாது.. காலம் அங்கு கிடையாது.. கதிரொளி உச்சிவேளையில் எங்கானும் தெறித்துவிழும் நானும் இங்கு ஒருவன்தான் எனக்காட்டுவது போல்.. எப்போதெனும் எங்கேனும் எழும்பும் யாதேனும் ஒரு மிருகத்தின் பேரோலி நிசப்தப் போர்வையை கிழிக்க முயன்று தோற்று அமிழும்.. ஏதுமில்லை என்பதே ஏதேனும் இருக்குமோ எனும் திகில் கிளப்பும்.. அந்த பேருலகத்தின் உயிர்களும் இயற்கையின் துணுக்காய் தம் இயல்பிலேயே தொலைந்து வாழும்.. இறைவனின் அந்த மோன உலகில் யானை நடந்தப் பாதையொன்றின் தொடக்கத்தில் அவன் நிற்கின்றான்.. எங்கு போகும் இந்த பாதை? தான் எங்கு போக வேண்டும்..? இந்த பாதையின் முடிவில் என்ன இருக்கும்? ஏதேதோ கேள்விகள் இடையில்லாது அவனுள்.. ஏதோ ஒரு கணத்தில் எல்லா கேள்விகளையும் உதறிவிட்டு வேடிக்கைப் பார்த்தபடி கைகள் வீசி நடக்கிறான் ஒரு இதமான பாடலைச் சீட்டியடித்தபடி.. அந்த உலகில் அவன் செய்ய ஆகச் சிறந்த வேறில்லை.. அங்கு எல்லாமும் அப்படித்தான் செய்கின்றன..

செவிகளின் உலகத்தில் ஒரு பார்வையாளன்

Image
அவன் ஒரு புலியைப் பார்த்து திகைத்து நிற்கையில் நீங்கள் அதைப் பூனை என்றீர்கள் எலியொன்றை அவன் கடந்து போகையில் நீங்கள் அதனிடம் ஆசிபெற   வரிசையில் நின்றீர்கள்.. புலியெது எலியெது யானையெது என்பதற்கெல்லாம்   உங்களுக்கும் அவனுக்கும் வேறுவேறு வரையரைகள்.. உங்கள் வரையரைகள் நீங்கள் காதுகளால் அடைந்தவை. உங்களுக்கு முன் மரித்த மக்கள் தங்களுக்கு முன்   மரித்தவர்கள் சொன்னதாய்   சொன்னவைதான் நீங்கள் பாதுகாக்கும் அத்துனை   வரையறைகளும்.. தனக்கான வரையரைகளை   அவன் தன் கண்களால் பெற்றதாய்ச் சொன்னபோது பதறிப்போய் நீங்கள் உங்கள் காதுகளையும் பொத்திக்கொண்டீர்கள்.. கண்கள் கொண்டு வாழ்வது   பாவம் என்றீர்கள்.. அதனைத் தோண்டிப் போட்டால் அன்றி மீட்சி இல்லை என்றீர்கள்.. "முதலில் உன் கண்களைத் தோண்டிப் போடு"   என அவனை நிர்பந்தித்தீர்கள்.. பல ஆயிரம் பேர்களின் பார்வையைக் குடித்த   புராதண அம்பொன்றை   பழுக்கக் காய்ச்சி அவன் கைகளில் திணித்தீர்கள்.. கையில் கூரிய அம்புடன் கடைசியாய் ஒருமுறை   கடவுளைப் பார்த்தபடி சிவந்த விழிகள் கசிந்து   வழியக் கேட்கின்றான்.. ''விழிகள் எனும் பெரும்கொடையால்