Posts

Showing posts from March, 2018

தேடலின் மூலம்

Image
எங்கோத் தவறு.. எங்கு தவறு?  தெரியவில்லை இடம் தெரியாதத் தவறை தேடும்தோறும் அறியாத தவறுகள் பல அறியக் கிடைக்கின்றன.. அகற்றியபடி மேன்மேலும் தேடுகின்றேன் மூலமான அந்தத் தவறை.. நாளின் இறுதிவரை அது எங்கெனத் தெரிவதே இல்லை.. துயரில்லை தெரியாத அந்த தவறினால்தான் மேலும் மேலும் எம் தவறுகள் களையப்பட்டு யான் மேம்படுகிறேன்... எங்கோத் தவறு ஒன்று எப்போதும் வாழட்டும் ஏனெனில் அதைப் பிடித்துக் கொண்டே நான் ஆண்டவன் பாதம் தொடும் தூரம் வரைகூட சென்றுவிடகூடும்

கடந்து போதல்

Image
இந்த உலகம் கொஞ்சம் நல்லவர்களாலும் கொஞ்சம் கெட்டவர்களாலும் நிறைய என்னாலும் சூழப்பட்டுள்ளது.. இந்த உலகம் கொஞ்சம் அறிவாளிகளாலும் கொஞ்சம் முட்டாள்களாலும் நிறைய என்னாலும் நிறைந்துள்ளது இந்த உலகம் கொஞ்சம் கடவுளாலும் கொஞ்சம் சாத்தானாலும் நிறைய என்னாலும் ஆக்கப்பட்டுள்ளது என் இந்த உலகில் கொஞ்சம் பேரை நேசிக்கின்றேன் கொஞ்சம் பேரை வெறுக்கின்றேன் எஞ்சியுள்ள என்னை என்ன செய்வதென்று தெரியாமல் கண்டும் காணாது கடந்து போகிறேன்

உச்சத்திற்கும் அப்பால்

Image
மின்னலின் பேரொளி ஒன்றைப் பார்த்தபின் எங்கும் இருட்டை மட்டுமே அவன் பார்த்தான்.. இடியின் பேரோசை ஒன்றைக் கேட்டபின் எங்கும் மௌனத்தை மட்டுமே அவன் கேட்டான்.. அமுதின் பெருஞ்சுவை ஒன்றை சுவைத்தபின் அவன் சுவைத்தவை யாவும் சாரமற்றே இருந்தன.. பெரியவை என்பவை எல்லாம் எப்போதும் மேலும் அடைதலற்ற வெறுமையிலேயே முடிகின்றன என இறுதியாய் அவன் உணர்ந்தான்.. இப்போதெல்லாம் அவன் பெரியதை வெறுமனே அஞ்சி ஒதுங்குகிறான்..

கடந்து செல்லும் நிகழ்

Image
அந்தப் பழைய ஆல்பத்தைக் கையில் ஏந்தும் போதெல்லாம் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.. அது ஒரு காலப் பயணம் என் வீடு முன்பு இப்படித்தான் இருந்தது.. இது என் பழைய பள்ளி இது என் பழைய சட்டை இது எங்கள் பழைய வண்டி இது நாங்கள் வளர்த்த நாய் இவர்கள் என் பழைய நண்பர்கள் இது நான் சென்ற ஒரு பயணம் ஆல்பம் முடியும் போது ஒருமுறை பெருமூச்சு விடுகிறேன் என் இன்றைய நாளை நேசிக்க இது இன்னும்  எத்துனைப் பழையதாகும் வரை நான் காத்திருக்க வேண்டுமோ?