Posts

Showing posts from 2021

சொல்லடா பிரகாசா

வாழ்க்கையே உண்மையில் நோக்கமாய் இருக்கையில், வாழ்க்கையில் எதற்கடா நோக்கங்கள் பிரகாசா..?? சொல்லடா ஞானச் சுயம்பிரகாசா ! ஆதியும் அந்தமும் ஆனவன்உனக்குள்ளே.. அர்த்தமில் தேடல்கள் எதற்கடா பிரகாசா..? சொல்லடா ஞான சுயம்பிரகாசா ! காலமேயானவன் காலமில்லாதவன்-காலம் குறித்தெலாம் கவலையேன் பிரகாசா..? சொல்லடா ஞான சுயம்பிரகாசா ! வாழ்தல் வரமாம் சாதலே சாபமாம் -மாயை இதனினும் வேறெதுப் பிரகாசா..? சொல்லடா ஞான சுயம்பிரகாசா.. ! விண்ணெலாம் நிறைந்தவன் தானேன உணர்ந்தவர் மண்ணிடம் தோற்பதும் நடக்குமோ பிரகாசா.. ? சொல்லடா ஞானச் சுயம்பிரகாசா ! நாடகம் உலகெலாம் நானில்லை நீயில்லை.. அவன் அவள் மட்டுமே அறிவையோ பிரகாசா..? சொல்லடா ஞான சுயம்பிரகாசா ! இருளில்லை ஒளியது.. குளிரில்லை தனலது.. நீயின்றி போகினால் ஏதடா பிரகசா..?சொல்லடா ஞான சுயம்பிரகாசா ! மண்ணெலாம் பொன்னடா.. ரெண்டுமே ஒண்ணடா.. பேதங்கள் செய்வதிடும் பேயெது பிரகாசா..?சொல்லடா ஞான சுயம்பிரகாசா !

நூல் அறிமுகம்

 யா பெரெல்மானின் பொழுதுபோக்கு பௌதிகம், நியூ சென்சுரி பதிப்பகம் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ கதைகள் கொண்டாட்டமானவை. காரணம் அதில் உள்ள கற்பனைக்கான இடம். பாட்டி வடைசுட்ட கதையை பத்து குழந்தைகளிடம் சொன்னால் அந்த பத்து பேரின் மனத்திற்குள்ளும் நிகழும் கதைகள் வேறுவேறானவை. அவர்களின் பாட்டிகளும் காக்கைகளும் நரிகளும் கூட வேறுவேறானவையாகவே இருக்கும்.  இந்த சுயகற்பனை என்னும் தனித்துவத்தைத் தான் இன்றைய குழந்தைகள் வகுப்பறைகளில் தொலைக்கின்றன. காரணம் பாடப்புத்தகங்களும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் அறிவியலையோ கணிதத்தையோ சலிப்பூட்டும் தர்க்கங்களாகவே பிள்ளைகளிடம் அளிக்கிறார்கள். ஆர்க்கமிடீஸ் தத்துவமோ, நியூட்டனின் விதிகளோ பிள்ளைகளுக்கு நெட்டுரு போட வேண்டிய இரு மதிப்பெண் வினாக்கள் மட்டுமே. சற்றும் சுவாரசியமில்லாத இந்த மனப்பாட விளையாட்டு பெரும் சலிப்பூட்டுவையாக மாறுபதில் வியப்பில்லை. இதை நம் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை புரிந்து கொள்ள உதவும் சுவாரசியங்களாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுவதில்லை. இந்த காரணங்களால்தான் நெட்டுரு போட்டு தேர்ச்சி பெற்ற கையோடு நம் மாணவர்கள் அறிவியலைக் கை விடுகிறார்கள்.  வாட்ஸப் வழிய

சுவர்களின் சிநேகிதி

வீட்டில் அவளுக்கு விளங்காத வஸ்து சுவர்கள் தான்.. தவழ்ந்து சென்று சுவர்களை ஒரு கையால் தொட்டுப் பார்ப்பாள்.. சுவரில் பூசிய வண்ணத்தின் சுவையைச் சோதனை செய்வாள்.. அதைத் தொட்டுத் தொட்டு மேலேறிச் செல்வதுபோல் எம்பிப் பார்ப்பாள்.. எதுவும் தோன்றாவிடில் தலையைக் கீழே சாய்த்து ஒரு கையால் சுவரைத் தட்டிக் கொண்டிருப்பாள். சுவர்களின் உயரம் அவளுக்கு பிரமிப்பைைத் தந்திருக்கலாம்.. அல்லது அதன் வேறு வேறு வண்ணங்கள் அவளை ஈர்த்திருக்கலாம்.. ஆனாலும் சுவர்கள்  சுவைப்பதில்லை.. பெரிதாய் சத்தம்  எழுப்புவதில்லை.. அசைந்து ஆடி வேடிக்கைக்கூட காட்டாமல் வெறுமனே நிமிர்ந்து நிற்கிறது.. அவள் உலகத்தில் இம்மூன்றும் செய்யாத ஒன்றிற்கு எந்த மதிப்பும் இல்லை.. குழப்பத்துடன் சுவரைத் தடவி கொண்டே என்னைத் திரும்பிப் பார்த்து லேசாய் புன்னகைக்கிறாள்.. மெதுவாய் எனக்குள் சொல்லிக்  கொள்கிறேன் ' சுவர்களைப் புரிந்துகொள் மகளே.. நீ பெறக்கூடிய உயர்ந்த அறிவு  அது'