நூல் அறிமுகம்

 யா பெரெல்மானின் பொழுதுபோக்கு பௌதிகம், நியூ சென்சுரி பதிப்பகம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கதைகள் கொண்டாட்டமானவை. காரணம் அதில் உள்ள கற்பனைக்கான இடம். பாட்டி வடைசுட்ட கதையை பத்து குழந்தைகளிடம் சொன்னால் அந்த பத்து பேரின் மனத்திற்குள்ளும் நிகழும் கதைகள் வேறுவேறானவை. அவர்களின் பாட்டிகளும் காக்கைகளும் நரிகளும் கூட வேறுவேறானவையாகவே இருக்கும்.  இந்த சுயகற்பனை என்னும் தனித்துவத்தைத் தான் இன்றைய குழந்தைகள் வகுப்பறைகளில் தொலைக்கின்றன. காரணம் பாடப்புத்தகங்களும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் அறிவியலையோ கணிதத்தையோ சலிப்பூட்டும் தர்க்கங்களாகவே பிள்ளைகளிடம் அளிக்கிறார்கள். ஆர்க்கமிடீஸ் தத்துவமோ, நியூட்டனின் விதிகளோ பிள்ளைகளுக்கு நெட்டுரு போட வேண்டிய இரு மதிப்பெண் வினாக்கள் மட்டுமே. சற்றும் சுவாரசியமில்லாத இந்த மனப்பாட விளையாட்டு பெரும் சலிப்பூட்டுவையாக மாறுபதில் வியப்பில்லை. இதை நம் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை புரிந்து கொள்ள உதவும் சுவாரசியங்களாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுவதில்லை. இந்த காரணங்களால்தான் நெட்டுரு போட்டு தேர்ச்சி பெற்ற கையோடு நம் மாணவர்கள் அறிவியலைக் கை விடுகிறார்கள்.  வாட்ஸப் வழியாகப் பெறும் போலி அறிவியல் கருத்துகளை அப்படியே ஏற்று பரப்புபவர்களில் முக்காலே மூணுவீசம் பேர்கள் படித்தவர்களாக அதிலும் ஆசிரியர்களாக இருப்பதெல்லாம் வகுப்பறைக்குளேயே நாம் அறிவியலைக் கைவிட்டதன் பயந்தான்.


இடுகாடுகளில் நள்ளிரவில் பூமியைத் துளைத்து ஆங்காங்கே நீல நிற சுவாலையுடன் தீ எரியும். இதைக் கொள்ளிவாய் பிசாசு என்று கருதி அஞ்சி  உயிர்விட்டவர்கள் ஏராளம். எலும்புகள் சிதைவதால் உருவாகும் பாஸ்பீன் வாயுதான் அந்த தீச்சுவாலைகளுக்கு காரணம் எனும் எளிய வேதியியல் புரியாததன் விளைவு இது.


அந்த வகையில் பெரெல்மானின் பொழுதுபோக்கு பௌதீகம் இயற்பியலை ஒரு கொண்டாட்டமாக முன்வைக்கின்றது. சிவாரசியமான வரலாற்று நிகழ்வுகளினூடகவும் கதைகளின் வழியாகவும் சிக்கலான இயற்பியல் கருத்துகளை விளக்குகிறார் பெரெல்மான்.


உதாரணமாக கண்களுக்குத் தெரியாத மனிதன் (Invisible man) உலகம் முழுதும் குழந்தைகள் விரும்பும் ஒரு பாத்திரம். நாம் பிறர்கண்களுக்கு தெரியாமல் மறைந்து இயங்க முடிந்தால் எப்படி இருக்கும் என கற்பனைச் செய்யாதவர்கள் நம்மில் எவர். அத்துனை பெரிய சுவாரசியம் நிகழ்ந்தால் உண்மையில் எப்படி இருக்கும் என்று ஒளியியல் மூலமாக விளக்குகிறார் பெரெல்மான். ஒளி ஒரு பொருளில் பட்டு எதிரொளிப்பதால் நாம் அதைக் காண்கிறோம். மாறாக ஒளி ஒரு பொருளினூடாக எதிரொளிப்பின்றி ஊடுருவி சென்றால் நாம் அதனைக் காண இயலாது. கண்ணாடிக் கதவுகளில் நாம் தெரியாமல் முட்டிக் கொள்ள நேர்வதற்கு இதுதான் காரணம். 


ஒருவேளை மனித உடல் வழியாக ஒளி விலகலற்று, ஊடுருவினால் அந்த மனிதன் பிறர் கண்களுக்கு தெரியாமல் மறைந்துவிடுவான். சரி, ஆனால் மனிதக் கண்கள் வேலை செய்யும் விதத்தையும் நாம் இங்கு அறிய வேண்டும். விழித்திரையால் ஒரு பொருளால் எதிரொளிக்கப்பட்ட ஒளி தடுக்கப்படுவதால் தான் நாம் காட்சிகளைக் காண்கிறோன். ஒரு மனிதனின் உடல் ஒளி ஊடுருவக்கூடியதாக மாறினால் விழித்திரை வேலை செய்யாது. அதாவது அவன் பார்வை அற்றவனாகத்தான் இருப்பான். 


இப்படியாக இந்த நூல் அனைத்து அறிவியல் அடிப்படைகள் குறித்து வெகு சுவாரசியமாகப் பேசுகிறது. நாம் படிப்பதற்கும், அறிவியல் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பரிசாக வழங்கவும் தகுந்த நூல் பெரெல்மானின் 'பொழுதுபோக்கு பௌதிகம்'


Comments

Popular posts from this blog

அன்னமய்யா

சொல்லடா பிரகாசா