Posts

Showing posts from June, 2021

சுவர்களின் சிநேகிதி

வீட்டில் அவளுக்கு விளங்காத வஸ்து சுவர்கள் தான்.. தவழ்ந்து சென்று சுவர்களை ஒரு கையால் தொட்டுப் பார்ப்பாள்.. சுவரில் பூசிய வண்ணத்தின் சுவையைச் சோதனை செய்வாள்.. அதைத் தொட்டுத் தொட்டு மேலேறிச் செல்வதுபோல் எம்பிப் பார்ப்பாள்.. எதுவும் தோன்றாவிடில் தலையைக் கீழே சாய்த்து ஒரு கையால் சுவரைத் தட்டிக் கொண்டிருப்பாள். சுவர்களின் உயரம் அவளுக்கு பிரமிப்பைைத் தந்திருக்கலாம்.. அல்லது அதன் வேறு வேறு வண்ணங்கள் அவளை ஈர்த்திருக்கலாம்.. ஆனாலும் சுவர்கள்  சுவைப்பதில்லை.. பெரிதாய் சத்தம்  எழுப்புவதில்லை.. அசைந்து ஆடி வேடிக்கைக்கூட காட்டாமல் வெறுமனே நிமிர்ந்து நிற்கிறது.. அவள் உலகத்தில் இம்மூன்றும் செய்யாத ஒன்றிற்கு எந்த மதிப்பும் இல்லை.. குழப்பத்துடன் சுவரைத் தடவி கொண்டே என்னைத் திரும்பிப் பார்த்து லேசாய் புன்னகைக்கிறாள்.. மெதுவாய் எனக்குள் சொல்லிக்  கொள்கிறேன் ' சுவர்களைப் புரிந்துகொள் மகளே.. நீ பெறக்கூடிய உயர்ந்த அறிவு  அது'