Posts

Showing posts from August, 2014

மண் பயனுற வேண்டும்: தாயிடம் வேண்டல்

Image
மானுடனாய் இந்த தேசத்திலே -எந்த மாதவத்தாலோ நான் பிறந்தேன் மானத்திலே உயர் பாரதத்தாய் -அவள் மடியினில் தவழும் வரம் அடைந்தேன் எத்துனை மதங்கள் எத்துனை இனங்கள் எத்துனை நிறங்கள் அவளிடத்தில் -பின் எத்துனை மொழிகள் எத்துனை வழிகள் எத்துனை விழிகள் அவள் முகத்தில்..! ஐயிறு திங்களே எனைச் சுமந்தாள் -இங்கு அணைத்தெனை வளர்த்திட்ட அன்னையவள் ஆயுளெல்லாம் என்னை சுமக்கின்ற -இந்த அருட்பெரும் தாய்க்குநான் ஏது செய்வேன்..? தேடியே எங்கெங்கோ அலைந்து கண்ட-என் தெய்வமே நீதான் பாரதமே -உனை வாழ்த்திட வார்த்தைகள் எனக்கில்லை -தலை வணங்கிட மட்டுமே நானறிவேன் அன்னை பாரத தேவியளே -இங்கு உன்னை நினைக்கவே உயிர் சுமந்தேன் மணியே, மாதே.. மாசற்றோய் -என் மண்ணே உனை நான் வேண்டுகிறேன் மண் பயனுறுமொரு வாழ்வு கொண்டால்-அதில் என்துயர் யாவையும் நான் மறப்பேன்-இந்த மானுடம் பயனுறும் வாழ்வு தவம் -அதை மறுக்கா தெனக்கே வரமருள்வாய்..

ஓ மனமே..

Image
அங்காடி நாயெனவே அலைந்துழலும் நெஞ்சமது துஞ்சாமல் குடித்திடுமுன் ஆற்றலிலே ஒருபாகம் கோபம் பொறாமையுடன் கொடும் ஆசை பல சேர்ந்து கொறித்தே கொல்வதுந்தன் ஆற்றலிலே ஒருபாகம் கொள்கையில்லா வாழ்க்கையினால் குழப்பத்தால் நீ தினமும் குழிதோண்டி புதைப்பதுந்தன் ஆற்றலிலே ஒருபாகம் திட்டமில்லா செயல்களினால் திடமின்றி விரயமென கட்டம்கட்டி கரைப்பதுந்தன் ஆற்றலிலே ஒருபாகம் துயரம் கழிவிரக்கம் தூங்காமல் செய்துன்னை துடிதுடிக்க கொன்றழிக்கும் ஆற்றலிலே ஒருபாகம் ஏக்கத்தில் ஒருபாகம்-வெறும் தூக்கத்தில் ஒருபாகம் கனவுகளில் ஒருபாகம்-வெறும் நினைவுகளில் ஒருபாகம் உலவுகளில் ஒருபாகம்-வெறும் உணர்ச்சிகளில் பெரும்பாகம் முக்காலே மூணுவீசம் முடியெனவே உதிர்ந்துவிட மிச்சமீதி வழித்ததிலே வாழ்க்கையினை வடிவமைத்தாய்.. நோஞ்சான் பிள்ளையென நொடிந்ததுவும் போனதினில் வியப்பென்ன மனமே.. வீணில் புலம்பாதே..!