செவிகளின் உலகத்தில் ஒரு பார்வையாளன்
பார்த்து திகைத்து நிற்கையில்
நீங்கள் அதைப் பூனை என்றீர்கள்
எலியொன்றை அவன் கடந்து போகையில்
நீங்கள் அதனிடம் ஆசிபெற
வரிசையில் நின்றீர்கள்..
புலியெது எலியெது யானையெது
என்பதற்கெல்லாம்
உங்களுக்கும் அவனுக்கும் வேறுவேறு
வரையரைகள்..
உங்கள் வரையரைகள்
நீங்கள் காதுகளால் அடைந்தவை.
உங்களுக்கு முன் மரித்த மக்கள்
தங்களுக்கு முன்
மரித்தவர்கள் சொன்னதாய்
சொன்னவைதான்
நீங்கள் பாதுகாக்கும் அத்துனை
வரையறைகளும்..
தனக்கான வரையரைகளை
அவன் தன் கண்களால்
பெற்றதாய்ச் சொன்னபோது
பதறிப்போய்
நீங்கள் உங்கள்
காதுகளையும் பொத்திக்கொண்டீர்கள்..
கண்கள் கொண்டு வாழ்வது
பாவம் என்றீர்கள்..
அதனைத் தோண்டிப் போட்டால் அன்றி
மீட்சி இல்லை என்றீர்கள்..
"முதலில் உன் கண்களைத் தோண்டிப் போடு"
என அவனை நிர்பந்தித்தீர்கள்..
பல ஆயிரம் பேர்களின் பார்வையைக் குடித்த
புராதண அம்பொன்றை பழுக்கக் காய்ச்சி
அவன் கைகளில் திணித்தீர்கள்..
கையில் கூரிய அம்புடன்
கடைசியாய் ஒருமுறை
கடவுளைப் பார்த்தபடி
சிவந்த விழிகள் கசிந்து
வழியக் கேட்கின்றான்..
''விழிகள் எனும் பெரும்கொடையால்
நீ என்னை ஆசிர்வதித்தாயா?
அல்லது சபித்தாயா?''
Comments
Post a Comment