அங்கு எல்லாமும் அப்படித்தான் செய்கின்றன

மௌனமும் இருளும்
அழுத்தும் அந்த வனாந்திரத்தில்
திசைகள் தெரியாது..
காலம் அங்கு கிடையாது..
கதிரொளி உச்சிவேளையில்
எங்கானும் தெறித்துவிழும்
நானும் இங்கு ஒருவன்தான்
எனக்காட்டுவது போல்..
எப்போதெனும் எங்கேனும் எழும்பும்
யாதேனும் ஒரு மிருகத்தின்
பேரோலி நிசப்தப் போர்வையை
கிழிக்க முயன்று தோற்று அமிழும்..
ஏதுமில்லை என்பதே
ஏதேனும் இருக்குமோ
எனும் திகில் கிளப்பும்..
அந்த பேருலகத்தின் உயிர்களும்
இயற்கையின் துணுக்காய் தம்
இயல்பிலேயே தொலைந்து வாழும்..
இறைவனின் அந்த மோன உலகில்
யானை நடந்தப் பாதையொன்றின்
தொடக்கத்தில் அவன் நிற்கின்றான்..
எங்கு போகும் இந்த பாதை?
தான் எங்கு போக வேண்டும்..?
இந்த பாதையின் முடிவில்
என்ன இருக்கும்?
ஏதேதோ கேள்விகள்
இடையில்லாது அவனுள்..
ஏதோ ஒரு கணத்தில்
எல்லா கேள்விகளையும் உதறிவிட்டு
வேடிக்கைப் பார்த்தபடி
கைகள் வீசி நடக்கிறான்
ஒரு இதமான பாடலைச்
சீட்டியடித்தபடி..
அந்த உலகில் அவன் செய்ய
ஆகச் சிறந்த வேறில்லை..
அங்கு எல்லாமும்
அப்படித்தான் செய்கின்றன..

Comments

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்