வாழ்வெனும் அபத்தம்

 

இந்த இரவில்
வீட்டில் நான்
அமர்ந்திருக்கும்
அதே இடத்தில்
யாரோ பெரும்பாட்டி ஒருத்தி
உயிர்விட்ட கதையை
கேட்டுக் கொண்டிருக்கிறேன்..
அவளை நான் பார்த்ததில்லை..
இன்று எனக்கு அவள்
வெறும் ஒரு தொல்கதைதான்..
அய்ந்தாறு தசாப்தங்கள்
ஒரு நூலின்
பக்கங்கள் போல
அனைத்தையும் புரட்டிவிட்டிருக்கிறது.
என் வாழ்வும்
ஒருநாள் மறக்கப்பட்டு
என் ஏதோ சிற்சில தருணங்கள்
மட்டும்
யாரோ இருவர் தூக்கம் வராமல்
பேசும் தொல்கதையாய்
ஆகும் என்பதை
என் அகம் உணர்வது
உண்மையென்றால்..
இன்னும் என் உள்ளம்
எதைக் கண்டு அஞ்சுகிறது?
என் எதிரிகளை
அருகழைத்து அணைத்துக்
கொள்வதை
இன்னும் எது தடுக்கிறது..?
என் இரவுகளை
பகலாக்கும் கவலைகளை
இன்னமும் கூட ஊதினால் பறக்காமல்
கணம் கொள்ளச் செய்வதெது?
என் தேவதைகளையும் பேய்களையும்
வேறுவேறு என
இன்னும் நான் நம்புகிறதேன்.. ?


5/2/2021

புதுப்பேட்டை

Comments

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்