தர்க்கம் சரியா?
தர்க்கத்தின் பெரிய சிக்கல் அது உணர்வுரீதியான பிணைப்புகளை மறுதலித்து அழித்துவிடுகிறது. உணர்வு நெகிழ்வானது. ஆற்றலை அள்ளித் தருவது. செயலூக்கத்தை வாரி வழங்குவது. வாழ்வை தருணங்களாக பகுப்பது. சுருக்கமாக உலோகக் கம்பிகளில் இடப்படும் உயவுப் பொருள் போன்றது. தனிப்பட்டு அது பயனற்றது, எனினும் கம்பியின் ஆயுளை நீட்டிப்பது; உஷ்ணத்தை குறைப்பது; தேய்மானத்தை தடுப்பது; கம்பி துருப்பிடிக்காமல் காப்பது; இன்னும் முக்கியமாக பயணத்தை இலகுவாக்கியது.
மனம் நெகிழ்ந்து இலகாமல் இங்கு எதுவும் சாத்தியமில்லை. மகத்தான செயல்கள் புரிவதற்கான எல்லையற்ற சக்தி, உணர்ச்சிபூர்வமான மனதிற்கு சாத்தியமாகிறது. அந்த உணர்ச்சிக்கான காரணம் எத்துனை எளிதாக இருப்பினும்.
நம் சிக்கல் தொடங்கியது வளரிளம் பருவத்திலேயே நமக்கான தருக்கக் கட்டுமானத்தை பலமாக உருவாக்கிக் கொண்டதில் தான். அப்போது போட்டி, பொறாமை, கனவு, ஆசை, அவமானம் போன்ற செயலூக்கம் தரவல்ல விசைகளை நடுநிலை செய்ததில்தான் இதெல்லாம் விளைந்தது. ஆனால் இப்போது அதை புரிந்து கொள்ள உதவுவதும் தர்க்கம்தான்.
தர்க்கம் நம் கைகளில் ஒட்டிக் கொண்டால் அதை உதறி விடுவது அத்தனை சாத்தியமில்லை. அதேபோல தர்க்கமற்ற மனம் எத்தனை எளிதாக பாய்கிறதோ அத்தனை இலகுவாக உடையவும் செய்யும். உலோகக் கம்பியின் பிடிமானம் தரும் உராய்வு தர்க்கம்தான். உராய்வு இலையில் எதுவுமில்லை தர்க்கமற்ற மனம் ஏதேனும் ஒரு முட்டுச்சந்தில் நின்றே தீரும். தர்க்கமே மனித அடையாளம், அதுவே மகத்தான பாதைகளை உருவாக்குகிறது. தர்க்கத்திற்கும் உணர்ச்சிக்குமான விகிதத்தை தீர்மானிப்பதில் தான் வாழ்வின் ரகசியம் உள்ளதாகத் தோன்றுகிறது.
Comments
Post a Comment