பெருவெடிப்புக்கான தவிப்பு
அவன் எரிமலை ஒன்று
வெடிக்கக் காத்திருந்தான்..
எரிமலைகள் வெடிக்கையில்
வைரம் கிடைக்கும்
என யாரோ அவனுக்குச்
சொல்லியிருந்தார்கள்..
எரிமலை
வெடிப்பதற்க்காக அவன்
காத்துக்கொண்டே இருந்தான்
காலங்கள் நீண்டு சென்றது..
அவ்வபோது புகையை மட்டும்
துப்பியபடி
எரிமலை உறக்கத்திலேயே கிடந்தது..
கடந்து சென்ற ஞானியிடன்
அவன் அழுதபடி முறையிட்டான்..
ஏன் இந்த எரிமலை வெடிக்கவே
இல்லை..
கூர்ந்து நோக்கியபின் ஞானி உரைத்தார்..
உன் காத்திருப்பை
எரிமலைகள் அறியாது..
காத்திருப்பவர்களுக்காக
அவை எப்போதும்
வெடிப்பதும் இல்லை..
எனில் காத்திருத்தல் பிழையா?
என் காத்திருப்புக்கு பொருளே
இல்லையா எனப் புலம்பினான்..
தன் புராதனப் பைக்குள்ளிருந்து
கொஞ்சம் விதைகளை அள்ளி
அவனிடம் கொடுத்தார் ஞானி..
இவைகளை ஆழமாக விதைத்துவிட்டு
காத்திரு..
உன் காத்திருப்பு பொருள்படும்.
விதைகளே காத்திருப்புக்கானவை..
வெடிப்புகள் என்பவையெல்லாம்
வெறும் விபத்துகள் மட்டுமே..
24/11/2020
தர்மபுரி
Comments
Post a Comment