எம்மவர்
ஆம், நீங்கள் எமக்குரியவர்தாம்
எம்மோடு துளிர்த்தவர்தாம்
எம்மோடே கிளைத்தவர்தாம்
நீங்களும் நானும்
இருதலை அரவம் ஒன்றின்
இருவேறு தலைகளாய்
இருந்திருக்கிறோம்..
ஆயினும் என்ன செய்ய?
வேறு வழியில்லை..
என்றோ, எப்போதோ
எப்படியோ,
எதோ ஒரு கண்கணா சுவரால்
நாம் பிரிக்கப்பட்டாயிற்று..
உங்கள் உலகும்
எம் உலகும்
இன்று
இருவேறு உலகுகள் தாம்,
அதை நாம் ஏற்றாலும்
ஏற்காவிடிலும்..
இனி என் மகிழ்ச்சிகள்
உங்களுக்கு புரியாது..
எம் துயர்கள்
உமக்கு அர்த்தமற்றதாக தோன்றலாம்..
உங்கள் மகிழ்வையும்
துயர்களையும்
நான் விளங்கி கொள்ளலும் அப்படியே..
எதோ ஒரு காலத்தின்
சில்லிடும் நினைவுகள் அன்றி
இன்று நம்மை இணைக்க
வேறொன்றும் இல்லை.
இருப்பினும்,
எம்மவரே..
வெற்று வார்த்தைகளுக்கும்
வீணான விளக்கங்களுக்கும்
தேவையென்ன?
ஓருடலின் உறுப்புகள்தாமே நாம்..?
நீங்கள் எம்மவர் எனும்
ஒற்றை நினைவு போதாதா..?
உங்கள் கண்ணீரை துடைக்க
எம் கரங்களும்
உங்கள் தலையைக் கோத
எம் விரல்களும்
நீள..?
Comments
Post a Comment