தற்செயல்களின் பேராறு
தற்செயலாக நிகழும் பல விபத்துகளின் தொகை என வாழ்வை வரையறுக்கிறேன். தற்செயல்கள் அனைத்து தற்செயலாக மட்டும் நிகழ்வதில்லை. அவை ஒவ்வொன்றும் பல நூறு தற்செயல்களாலேயே நிகழ்கின்றன. பின்னோக்கி செல்ல செல்ல தற்செயல்களின் எண்ணிக்கை ஆயிரம் லட்சம் கோடி எனப் பெருகிக் கொண்டே இருக்கும். தற்செயல்கள் எனும் பேராற்றில் மிதக்கும் துரும்பென நம்மை உணரும் தருணம், இனியும் அவற்றை வெறுமனே தற்செயல் என அழைப்பது பொருத்தமல்ல எனத் தோன்றிவிடுகிறது. நமக்கே நமக்கென பல கோடி விசைகள் சேர்ந்து உருவாக்கும் பாதையில்தான் நம் அன்றாடம் நிகழ்கிறது, இதை மீறவோ, விலகவோ அனேகமாக வாய்ப்பில்லை எனத்தோன்றுகிறது. அன்றாடங்களில் வாழ்தலே அலாதி எனும் தெளிவும் கிடைக்கிறது. (சார், நீங்க பிலாசப்பிக்குள்ள போயிட்டீங்க!)
அன்றாடங்களில் வாழ்தல் அத்துனை எளிதானதல்ல. நாம் நினைவுகளாலும், கனவுகளாலும் மற்றும் உணர்வுகளாலும் வாழவே பழகியிருக்கிறோம். அவற்றை கடந்து வருதல் மிகப்பெரும் முயற்சியைக் கோருவது. நம் நினைவுகள் நிறைவானவை ஆகும்வரை, நம் கனவுகள் நிஜமானவை ஆகும்வரை, நம் உணர்வுகள் சமநிலை கொள்ளும்வரை, அன்றாடங்களில் வாழ்கிறேன் என்று கூறுவதெல்லாம் ஒரு பாவனைத்தான். நினைவுகளையும் கனவுகளையும் தொலைத்து உணர்வுகளை கடந்து வரவேண்டும். அல்லது அவை அனைத்தையும் ஜெயித்து முன்னேற வேண்டாம். வெல்லாமல் எதையும் கடத்தல் என்பது சாத்தியமற்றதென்றே தோன்றுகிறது.
ம்ம்ம்..
தற்செயல்கள் நமக்கு அவ்வப்போது மிகச்சிறந்த பரிசுகளை வழங்கிவிடுகிறயது. இந்த பெரும் விளையாட்டில் நமக்கு கிடைக்கு 'லைப் லைன்கள்' போன்றவை அவை. அதை நம் நல்லூழ் அல்லது அதிர்ஷ்டம் அல்லது வேறு எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். என் நல்லூழ் அய்ந்தாண்டுகளுக்கு என் கஷ்மீரிய நண்பன் ஒருவன் வழியாக அவளை எனக்கு அறிமுகப்படுத்தியது. எங்கள் தற்செயல்களின் பேராறுகள் சிலதூரங்களில் ஒன்று சேர்ந்தன. அதன் இரண்டாம் ஆண்டு நாள் இது.
12/9/2020
Comments
Post a Comment