தேவகுமாரி
அந்த பெரிய
ஜவுளிக்கடை வாசலில்
சாண்டா க்ளாஸ் ஒப்பனையில்
இருவர் ஆடிக்கொண்டிருந்தனர்
உற்சாகமான குழந்தைகள்
சிலருடன்
அவர்களின் பக்கம் ஓடிச் சென்று
ஆட ஆரம்பித்தனர்.
விழிகள் விரிய இதைப்
பார்த்தபடி நின்றாள் நந்தனா..
நீயும் போய் ஆடுறயா? என்றேன்
லேசாய் வெட்கத்துடன் புன்னகைத்து
மாட்டேன் எனத் தலையாட்டினாள்..
ஒன்றன் பின் ஒன்றாய்
மூன்று பாடல்களுக்கு ஆடியபின்
நின்று மூச்சு வாங்கினர்
கிருஸ்மஸ் தாத்தாக்கள்..
நந்தனா புறப்பட்டபோது அடுத்த
பாடலுல் நடனமும் ஆரம்பித்தது..
வண்டியின் பெட்ரோல்
டாங்கில் அமர்ந்தபடி ஏதும் பேசாது
எதையோ யோசித்தபடி வந்தவளை
சீண்டினேன்..
என்ன பாப்பா.. தூக்கம் வருதா..?
இல்லை எனத் தலை ஆட்டி
மீண்டும் மௌனமானால்..
வீடு அடைந்து
வண்டி நிறுத்தப்பட்டபின்
மெதுவாய்க்
கேட்டாள்..
'சாண்டா க்ளாஸ்களுக்கும்
கால் வலிக்கும் இல்லப்பா?'
தூரத்து வீடொன்றின் மீது
எரிந்த நட்சத்திர விளக்கொன்றைப்
பார்த்தபடி
'தெரியலை பாப்பா' என்றேன்.
25/12/2020
திருப்பத்தூர்
Comments
Post a Comment