நினைவுகள்
அந்த காலத்தைப்
பேசும்தோறும்
பாட்டியின் கண்கள் ஒளிகொண்டுவிடும்..
விதம்விதமாய் மனிதர்கள்
வந்து போவார்கள்
அவளின் அந்த கால நினைவுகளில்..
கோலி ஆடிய
மகனின் விரல்களில் சிலதைக்
கல்லால் நசுக்கி
கூழாக்கிய தந்தை..
காலராவில் இறந்த மனைவியின் உடலை
கிணற்றில் சரித்துவிட்டு
திரும்பிபாராது வந்த கணவன்..
16 நிரம்பாத சிறுமியை
மூன்றாவதாய் மணந்த
யாரோ ஒரு தாத்தா..
மங்கலாக தெரிந்த கண்ணுக்கு
வைத்தியம் என்று
எருக்கம்பால் ஊற்றியதால்
ஒரு கண்ணில் விழி தொலைத்த
யாரோ ஒரு பாட்டி..
தாழ்த்தப்பட்டவன் ஒருவனைக்
காலையில் கண்டால்
சாணியை தலையில் வைத்துக் குளித்து தீட்டு கழிக்கும்
பெரிய மனிதர்..
பேயைக் கண்டதாய்க் கூறி
குளிர்காய்ச்சல் வந்து மாண்ட
அண்டை வீட்டு கிழவர்..
காலராவில் அடுத்தடுத்து
மாண்ட எதிர்வீட்டு சகோதரிகள்..
எல்லாக் கதைகளையும் முடித்துவிட்டு
எப்போதும்
இறுதியாய் இப்படி சொல்வாள் பாட்டி..
'ம்ம்.. அந்தக் காலம் மாறி வராது..
இப்பலாம்
காலம் ரொம்ப கெட்டுப் போய்விட்டது..'
09/10/2020
புதுப்பேட்டை
Comments
Post a Comment