குழிபணியாரத் தத்துவ விசாரம்


கொதிக்கும் குழிகளில்
அதிகமாய் எண்ணை விட்டு
நன்கு பூசப்படுகிறது..
உஷ்ணம் உறைத்ததும்
ஒவ்வொரு குழிக்கும்
சரிசமமாய் ஒரு கரண்டி மாவு..
க்ரீச் எனும் சத்தத்துடன்
மாவு விழுகையில்
ஒரு ஜனனம் நிகழ்கிறது..
நாற்புறமும் சூழும் வெக்கையில்
மாவு கனிந்து சிவக்கத் தொடங்கும்..
இன்னமும் சிறிது எண்ணை விளாவி
அடியில் தீ அதிகமாக்கப்படும்..
பழக்கமான கரம் ஒன்று
லாவகமாய் பிடித்திருக்க
குழியோரங்களில்
லேசாய்ச் சுரண்டித் திருப்புகிறது ஒரு கூரிய கம்பி..
தன்முறை வந்ததும்
லாவகமாய்
உடனே புரண்டு படுத்து
மறுபக்கத்தை உஷ்ணத்திற்கு
காட்ட வேண்டும்..
மேற்புறம் சிவந்து மொறுமொறுக்கும்..
மறுபக்கச் சூடும்
உள்ளே இறங்கி
ஆழம் வரை மாவை வேகவைக்கும்..
கடுகும் கறியிலையும் மணக்க
உப்பும் காரமும் மாவின் லேசான புளிப்புச் சுவையுமாய்..
அங்கங்கே கிடைக்கும் மொறுமொறு பருப்புமாய்..
ஆஹா.. வாழ்க்கை இனிது..

சில உருண்டைகள் தீய்ந்து விடுகின்றன..
குழிகளின் மேல் தேவையற்ற
பற்று அதற்கு..
கம்பி சொல்கையில்
திரும்பிக் கொள்ளாமல்
ஒட்டிக் கொண்டிருந்த பாவம்..

சில உருண்டைகள் வேகவே இல்லை..
உஷ்ணம் குறைந்த ஓரக் குழிகளைத்
தேர்ந்தெடுத்த பாவம்..

மீண்டும் மீண்டும் குழியை நிரப்பிக்
கொண்டே உள்ளன
விதியின் கரங்கள்..
தீய்ந்ததும் வேகாததும் குப்பைக்குச்
செல்ல
நன்கு கனிந்த மொறுமொறுப்பான
உருண்டைகள் மட்டுமே
யாருக்கோ எங்கோ

படைக்கப்படுகின்றன..


-July 2022 

Comments

Popular posts from this blog

கனவுலகம்

Be Present

அழிவின் ஞானம்