Posts

Showing posts from 2024

வாழ்வெனும் அபத்தம்

  இந்த இரவில் வீட்டில் நான் அமர்ந்திருக்கும் அதே இடத்தில் யாரோ பெரும்பாட்டி ஒருத்தி உயிர்விட்ட கதையை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. அவளை நான் பார்த்ததில்லை.. இன்று எனக்கு அவள் வெறும் ஒரு தொல்கதைதான்.. அய்ந்தாறு தசாப்தங்கள் ஒரு நூலின் பக்கங்கள் போல அனைத்தையும் புரட்டிவிட்டிருக்கிறது. என் வாழ்வும் ஒருநாள் மறக்கப்பட்டு என் ஏதோ சிற்சில தருணங்கள் மட்டும் யாரோ இருவர் தூக்கம் வராமல் பேசும் தொல்கதையாய் ஆகும் என்பதை என் அகம் உணர்வது உண்மையென்றால்.. இன்னும் என் உள்ளம் எதைக் கண்டு அஞ்சுகிறது? என் எதிரிகளை அருகழைத்து அணைத்துக் கொள்வதை இன்னும் எது தடுக்கிறது..? என் இரவுகளை பகலாக்கும் கவலைகளை இன்னமும் கூட ஊதினால் பறக்காமல் கணம் கொள்ளச் செய்வதெது? என் தேவதைகளையும் பேய்களையும் வேறுவேறு என இன்னும் நான் நம்புகிறதேன்.. ? 5/2/2021 புதுப்பேட்டை

மனம் குறித்து..

  முதல் ஐந்து புலன்களுக்கு தனித்தியங்கும் ஆற்றல் கிடையாது. மனம் எனும் ஆறாம் புலன் முதல் ஐந்தில் ஏதேனுமொன்றுடன் இணைந்து செயல்படுகையில் அனுபவம் உண்டாகிறது. உதாரணம் நாக்குடன் மனம் சேர்ந்து சுவை எனும் அனுபவத்தை உருவாக்கும். போலவே கண்ணுடன் சேர்ந்து காட்சி எனும் அனுபவத்தை. மனம் அதில் லயிக்காமல் நம் புலன் செய்யும் எச்செயலும் அனுபவமாவதில்லை. வெறுமனே செயலாக மட்டுமே நிகழ்கிறது. மேலும் ஒரு தருணத்தில் ஒரு அனுபவம் மட்டுமே நிகழ சாத்தியம் உண்டு. உதாரணமாக நாம் பிரியாணி சாப்பிடும் போது காட்சி இன்பம், நுகர்ச்சி இன்பம், சுவை இன்பம் என இவற்றில் ஒரு நேரத்தில் ஒன்று மட்டுமே நாம் உணர்வோம். சுவையில் லயித்தால் மணம் தெரியாது. மணத்தில் இருந்தால் சுவை தெரியாது. அனுபவங்கள் நினைவுகளாக நம் மூளையில் சேர்கிறது. நல்லது கெட்டது எனும் இரு அனுபவங்களும் மூளையில்  வெறும் நினைவுகள் மட்டுமே. எனில் மூளை அதை எப்படி வேறுபடுத்தி உணர்கிறது..? உணர்ச்சிகளாக. ஒவ்வொரு அனுபவமும் ஒரு உணர்ச்சியோடு தொடர்புடையது. உதாரணமாக ஒரு நல்ல அனுபவம் நமக்குள் மகிழ்ச்சியை உருவாக்குகிறது. மற்றொரு தீய அனுபவம் நமக்குள் சலிப்பை உருவாக்குகிறது. ம...

ஒப்பீடு

 இந்த உலகத்தின் ஒவ்வொரு மனிதனும் தான் ஒரு ஒப்பற்ற உன்னத வாழ்க்கை வாழ்வதாக சக மனிதனை நம்ப வைக்க முயல்கிறான்.  மாறாக அவன் வாழ்வை சீரழிப்பது அந்த முயற்சிதான் என்பதை அவன் உணர்வதே இல்லை.  நீ ஒரு உயர்ந்த வாழ்க்கை வாழ்வதாக நினைத்தால் முதலில் அதை நீ நம்பு. உன்னில் நீ திருப்தி கொள். அமைதி கொள். அது குறித்து நீ மகிழ்ச்சியாய் இரு. அப்படி உன்னால் இருக்க முடியாவிட்டால் உன் வாழ்க்கை மேலானது அல்ல என்பதை உணர்ந்து கொள். அதை மேலானதாக்க என்ன செய்யலாம் என யோசி.  நீ மேலான வாழ்க்கை வாழினும், கீழான வாழ்க்கை வாழினும் அது உன் வரையில் மட்டுமே, அடுத்தவனுக்கு அதில் துளியும் அக்கறை இல்லை என்பதைப் புரிந்துகொள். அதுவே நீ மேலான வாழ்வை அடைவதற்கான ஆரம்பப் படி. வாழ்க்கைக்கு ஒப்புமை இல்லை. ஒவ்வொருவர் வாழ்வும் தனித்துவமானது. ஆகவே ஒவ்வொன்றும் தன்னளவில் மேலானதுதான். அதை பிறர் வாழ்வோடு ஒப்பிடும்போதே நீ அதைக் கீழே தள்ளுகிறாய்.  20/1/2021 தருமபுரி

தேவகுமாரி

 அந்த பெரிய ஜவுளிக்கடை வாசலில் சாண்டா க்ளாஸ் ஒப்பனையில் இருவர் ஆடிக்கொண்டிருந்தனர் உற்சாகமான குழந்தைகள் சிலருடன்  அவர்களின் பக்கம் ஓடிச் சென்று ஆட ஆரம்பித்தனர். விழிகள் விரிய இதைப்  பார்த்தபடி நின்றாள் நந்தனா.. நீயும் போய் ஆடுறயா? என்றேன் லேசாய் வெட்கத்துடன் புன்னகைத்து மாட்டேன் எனத் தலையாட்டினாள்.. ஒன்றன் பின் ஒன்றாய் மூன்று பாடல்களுக்கு ஆடியபின் நின்று மூச்சு வாங்கினர் கிருஸ்மஸ் தாத்தாக்கள்.. நந்தனா புறப்பட்டபோது அடுத்த  பாடலுல் நடனமும் ஆரம்பித்தது.. வண்டியின் பெட்ரோல்  டாங்கில் அமர்ந்தபடி ஏதும் பேசாது எதையோ யோசித்தபடி வந்தவளை சீண்டினேன்.. என்ன பாப்பா.. தூக்கம் வருதா..? இல்லை எனத் தலை ஆட்டி மீண்டும் மௌனமானால்.. வீடு அடைந்து வண்டி நிறுத்தப்பட்டபின் மெதுவாய்க் கேட்டாள்.. 'சாண்டா க்ளாஸ்களுக்கும் கால் வலிக்கும் இல்லப்பா?' தூரத்து வீடொன்றின் மீது எரிந்த நட்சத்திர விளக்கொன்றைப் பார்த்தபடி  'தெரியலை பாப்பா' என்றேன். 25/12/2020 திருப்பத்தூர்

பெருவெடிப்புக்கான தவிப்பு

  அவன் எரிமலை ஒன்று வெடிக்கக் காத்திருந்தான்.. எரிமலைகள் வெடிக்கையில் வைரம் கிடைக்கும் என யாரோ அவனுக்குச் சொல்லியிருந்தார்கள்.. எரிமலை வெடிப்பதற்க்காக அவன் காத்துக்கொண்டே இருந்தான்  காலங்கள் நீண்டு சென்றது.. அவ்வபோது புகையை மட்டும் துப்பியபடி எரிமலை உறக்கத்திலேயே கிடந்தது.. கடந்து சென்ற ஞானியிடன் அவன் அழுதபடி முறையிட்டான்.. ஏன் இந்த எரிமலை வெடிக்கவே இல்லை.. கூர்ந்து நோக்கியபின் ஞானி உரைத்தார்.. உன் காத்திருப்பை எரிமலைகள் அறியாது.. காத்திருப்பவர்களுக்காக அவை எப்போதும் வெடிப்பதும் இல்லை.. எனில் காத்திருத்தல் பிழையா? என் காத்திருப்புக்கு பொருளே இல்லையா எனப் புலம்பினான்.. தன் புராதனப் பைக்குள்ளிருந்து கொஞ்சம் விதைகளை அள்ளி அவனிடம் கொடுத்தார் ஞானி.. இவைகளை ஆழமாக விதைத்துவிட்டு காத்திரு.. உன் காத்திருப்பு பொருள்படும். விதைகளே காத்திருப்புக்கானவை.. வெடிப்புகள் என்பவையெல்லாம் வெறும் விபத்துகள் மட்டுமே.. 24/11/2020 தர்மபுரி

எம்மவர்

 ஆம், நீங்கள் எமக்குரியவர்தாம் எம்மோடு துளிர்த்தவர்தாம் எம்மோடே கிளைத்தவர்தாம் நீங்களும் நானும் இருதலை அரவம் ஒன்றின் இருவேறு தலைகளாய் இருந்திருக்கிறோம்.. ஆயினும் என்ன செய்ய? வேறு வழியில்லை.. என்றோ, எப்போதோ எப்படியோ, எதோ ஒரு கண்கணா சுவரால் நாம் பிரிக்கப்பட்டாயிற்று.. உங்கள் உலகும் எம் உலகும் இன்று இருவேறு உலகுகள் தாம், அதை நாம் ஏற்றாலும் ஏற்காவிடிலும்.. இனி என் மகிழ்ச்சிகள் உங்களுக்கு புரியாது.. எம் துயர்கள் உமக்கு அர்த்தமற்றதாக தோன்றலாம்.. உங்கள் மகிழ்வையும் துயர்களையும் நான் விளங்கி கொள்ளலும் அப்படியே.. எதோ ஒரு காலத்தின் சில்லிடும் நினைவுகள் அன்றி இன்று நம்மை இணைக்க வேறொன்றும் இல்லை. இருப்பினும், எம்மவரே.. வெற்று வார்த்தைகளுக்கும் வீணான விளக்கங்களுக்கும் தேவையென்ன? ஓருடலின் உறுப்புகள்தாமே நாம்..? நீங்கள் எம்மவர் எனும் ஒற்றை நினைவு போதாதா..? உங்கள் கண்ணீரை துடைக்க எம் கரங்களும் உங்கள் தலையைக் கோத எம் விரல்களும் நீள..?

நினைவுகள்

 அந்த காலத்தைப்  பேசும்தோறும்  பாட்டியின் கண்கள் ஒளிகொண்டுவிடும்.. விதம்விதமாய் மனிதர்கள் வந்து போவார்கள் அவளின் அந்த கால நினைவுகளில்.. கோலி ஆடிய மகனின் விரல்களில் சிலதைக் கல்லால் நசுக்கி கூழாக்கிய தந்தை.. காலராவில் இறந்த மனைவியின் உடலை  கிணற்றில் சரித்துவிட்டு திரும்பிபாராது வந்த கணவன்.. 16 நிரம்பாத சிறுமியை மூன்றாவதாய் மணந்த  யாரோ ஒரு தாத்தா.. மங்கலாக தெரிந்த கண்ணுக்கு வைத்தியம் என்று எருக்கம்பால் ஊற்றியதால் ஒரு கண்ணில் விழி தொலைத்த யாரோ ஒரு பாட்டி.. தாழ்த்தப்பட்டவன் ஒருவனைக் காலையில் கண்டால் சாணியை தலையில் வைத்துக் குளித்து தீட்டு கழிக்கும்  பெரிய மனிதர்.. பேயைக் கண்டதாய்க் கூறி குளிர்காய்ச்சல் வந்து மாண்ட அண்டை வீட்டு கிழவர்.. காலராவில் அடுத்தடுத்து மாண்ட எதிர்வீட்டு  சகோதரிகள்..  எல்லாக் கதைகளையும் முடித்துவிட்டு எப்போதும் இறுதியாய் இப்படி சொல்வாள் பாட்டி.. 'ம்ம்.. அந்தக் காலம் மாறி வராது.. இப்பலாம் காலம் ரொம்ப கெட்டுப் போய்விட்டது..' 09/10/2020 புதுப்பேட்டை

தர்க்கம் சரியா?

 தர்க்கத்தின்  பெரிய சிக்கல் அது உணர்வுரீதியான பிணைப்புகளை மறுதலித்து அழித்துவிடுகிறது.  உணர்வு நெகிழ்வானது.  ஆற்றலை அள்ளித் தருவது. செயலூக்கத்தை வாரி வழங்குவது. வாழ்வை தருணங்களாக பகுப்பது. சுருக்கமாக உலோகக் கம்பிகளில் இடப்படும் உயவுப் பொருள் போன்றது. தனிப்பட்டு அது பயனற்றது, எனினும் கம்பியின் ஆயுளை நீட்டிப்பது;  உஷ்ணத்தை குறைப்பது; தேய்மானத்தை தடுப்பது; கம்பி துருப்பிடிக்காமல் காப்பது; இன்னும் முக்கியமாக பயணத்தை இலகுவாக்கியது.  மனம் நெகிழ்ந்து இலகாமல் இங்கு எதுவும் சாத்தியமில்லை. மகத்தான செயல்கள் புரிவதற்கான எல்லையற்ற சக்தி, உணர்ச்சிபூர்வமான மனதிற்கு சாத்தியமாகிறது.  அந்த உணர்ச்சிக்கான காரணம் எத்துனை எளிதாக இருப்பினும்.  நம் சிக்கல் தொடங்கியது வளரிளம் பருவத்திலேயே நமக்கான தருக்கக் கட்டுமானத்தை பலமாக உருவாக்கிக் கொண்டதில் தான். அப்போது போட்டி, பொறாமை, கனவு, ஆசை, அவமானம் போன்ற செயலூக்கம் தரவல்ல விசைகளை நடுநிலை செய்ததில்தான் இதெல்லாம் விளைந்தது.  ஆனால் இப்போது அதை புரிந்து கொள்ள உதவுவதும் தர்க்கம்தான்.  தர்க்கம் நம் கைகளில் ஒட்டிக் கொண்டால...

மூன்று தோல்விகள்

  பொதுவாக நாம் அனைவரும் வெற்றி-தோல்வி என்பதை புறப்பொருட்கள் சார்ந்தவை என்றே பழக்கிவைக்கப்பட்டிருக்கிறோம். புறப்பொருள் வெற்றி என்பது அவ்வக்கணங்களில் குதூகலத்தையோ துயரத்தையோ அளிக்கும் என்றாலும் நீண்ட நோக்கில் அவற்றிற்கு பெரிய மதிப்பு ஏதும் இல்லை. 'உண்பது நாழி உடுப்பது இரண்டு' என்பதும் 'மண்ணாள்பவர் ஆயினும் முடிவில் ஒரு பிடி சாம்பல்' என்பதும் நம் முன்னோர் வாக்கு. இவைகளைச் சுற்றி நம் வாழ்வை வடித்துக் கொண்டோம் எனில் வாழும் காலத்திலேயே நம் வாழ்க்கை பொருளற்றதாகிவிடும். பணம், பொன், பதவி இவை யாவும் வாழும் காலத்தில் நமக்கு உபயோகமான கருவிகள்தாம் எனினும் அவையாவும் நம் வாழ்க்கைக்கு எவ்வகையிலும் பொருள் தருவதில்லை.  பாலவயதில் சிறுவர் பூங்காவிற்கு நாம் அனைவரும் சென்றிருப்போம். அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தையும் நம் ஒத்தவர்களுடன் சேர்ந்து குதூகலமாக அனுபவித்திருப்போம். அப்பொழுதெல்லாம் அந்த உபகரணங்களை நாம் நமக்கானது என்று உரிமைக் கொண்டாடினோமா? நம் வீட்டுக்கு அவற்றை கொண்டு சென்று நமக்கானவை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினோமா? மாறாக அப்பொருட்களை அந்நிலையிலேயே அனுபவிக்க மட்டும...

தற்செயல்களின் பேராறு

 தற்செயலாக நிகழும் பல விபத்துகளின் தொகை என வாழ்வை வரையறுக்கிறேன். தற்செயல்கள் அனைத்து தற்செயலாக மட்டும் நிகழ்வதில்லை. அவை ஒவ்வொன்றும் பல நூறு தற்செயல்களாலேயே நிகழ்கின்றன. பின்னோக்கி செல்ல செல்ல தற்செயல்களின் எண்ணிக்கை ஆயிரம் லட்சம் கோடி எனப் பெருகிக் கொண்டே இருக்கும்.  தற்செயல்கள் எனும் பேராற்றில் மிதக்கும் துரும்பென நம்மை உணரும் தருணம், இனியும் அவற்றை வெறுமனே தற்செயல் என அழைப்பது பொருத்தமல்ல எனத் தோன்றிவிடுகிறது.  நமக்கே நமக்கென பல கோடி விசைகள் சேர்ந்து உருவாக்கும் பாதையில்தான் நம் அன்றாடம் நிகழ்கிறது, இதை மீறவோ, விலகவோ அனேகமாக வாய்ப்பில்லை எனத்தோன்றுகிறது. அன்றாடங்களில் வாழ்தலே அலாதி எனும் தெளிவும் கிடைக்கிறது. (சார், நீங்க பிலாசப்பிக்குள்ள போயிட்டீங்க!) அன்றாடங்களில் வாழ்தல் அத்துனை எளிதானதல்ல. நாம் நினைவுகளாலும், கனவுகளாலும் மற்றும் உணர்வுகளாலும் வாழவே பழகியிருக்கிறோம். அவற்றை கடந்து வருதல் மிகப்பெரும் முயற்சியைக் கோருவது.  நம் நினைவுகள் நிறைவானவை ஆகும்வரை, நம் கனவுகள் நிஜமானவை ஆகும்வரை, நம் உணர்வுகள் சமநிலை கொள்ளும்வரை, அன்றாடங்களில் வாழ்கிறேன் என்று கூறுவதெல்லா...