Posts

தீரா முத்தங்கள்..

உன்னுடனான கதையாடல்களில் வார்த்தைகள் தீர்வதில்லை.. உன் உரு எதிரிருக்கையில் விழிகள் சலிப்பதில்லை.. உன் குரல் ஒலிக்கும் கணங்களில் உலகம் நிசப்தமாகி மீண்டும் சலசலக்கிறது.. எல்லாம் இப்படி மேலுமேலுமாய் பல்கிப் பெருக, உன்னுடனான பொழுதுகள் மட்டும் ஏன் இத்துனை எளிதாய்த் தீர்ந்து போகிறது? திரும்பும் வழிதோறும் இதழ்களில் கனக்கிறது என் எஞ்சிய முத்தங்கள், மழை ஓய்ந்தபின் இலைகளில் தங்கும் நீர்த் துளிகளாய்.. என்னதான் செய்வதவற்றை? நீயே சொல்லேன்.. -February 2022

மலையாய்.. அருவியாய்.. அலைகளாய்..

  எப்போதும் நிமிர்ந்தே நிற்கிறது மலை.. எப்போதும் விழுந்தபடியே உள்ளது அருவி.. நீலக்கடலின் அலைகளோ விழுவதும் எழுவதுமாய் இருக்கிறது… இயற்கையின் துளியாய் என்னையும் உணர்ந்த கணத்தில் நொடியில் எல்லாம் அழகாகிப்போனது.. மலையாய்.. அருவியாய்.. அலைகளாய். -February 2022

பூஜ்ஜியத்துக்கு அருகில்..

  'இனி ஒருபோதும் மனம் தளர மாட்டேன்.. இனி ஒரு கணமும் துயர் பட மாட்டேன்.. இனி ஒருதுளியும் கண்ணீர் உகுக்க மாட்டேன்.. இனி ஒரு நொடியும் மனம் சோர மாட்டேன்..' விதிகள் சமைத்து வெகுநாட்களாயிற்று.. பின் எதோ ஒரு நொடியில் மீண்டும் விழியோரம் துளி கண்ணீர்.. மனதில் ஒரு சோர்வு.. நெஞ்சில் சிறு வலி.. துயரின் மெல்லிய அழுத்தம்.. விதிகள் நினைவுக்கு வந்தபோது லேசாய் ஒரு புன்னகை.. ஆம்.. என் விதிகள் அப்படிதான்.. என் கணக்கில பூஜ்ஜியம் என்பது எப்போதும் பூஜ்ஜியமே அல்ல.. பூஜ்ஜியத்துக்கு அருகில்.. கூடுமான அருகில்.. -February 2022

நறுமுகை

மெதுமெதுவாய் அவள் குறித்த எண்ணங்களை மறக்கிறேன்.. அவள் முத்தங்களை.. அவள் ஸ்பரிசத்தை.. அவளுடனான பொழுதுகளை.. புரியாத அவளின் மொழியை.. அவள் சிரிப்பை.. ஒவ்வொரு நினைவாய் என்னிலிருந்து எழுந்து பறந்து எங்கோ மறைகின்றன.. உறக்கம் விழிதொடும் ஏதோ ஒரு கணத்தில், அவள் வாசம் நினைவில் எழுகிறது.. அதை ஒன்றும் செய்ய முடியாது.. தலையணை போல வெறுமனே அவள் வாசத்தை அணைத்தபடி உறங்கி போகிறேன்.. கனவினில், அறியாத பூக்கள் பல நிறைந்த நந்தவனத்தில் நடந்து கொண்டே இருக்கிறேன்.. பூக்களில் அவள் முகம் தேடியபடி.. -March 2022

அவள்

  விழியினில் மேதினிக் கொளிதரும் தேவியள் மொழியினில் கிளியினை மிஞ்சுவாள் -இருள்மிகு வழியினில் கைவிளக் கணையவள்; கருணையில் அழிவிலாக் கடவுளின் கூறவள்; அறிந்திதை பழியிலா அவள்கரம் பற்றிடத் தினம்தினம் ஒழிவிலா கனவுகள் கண்டனன் தோழா நான்.. பரிவினில் தாயவள்; பாரெலாம் ஒளிபெறும் அறிவினில் இரவியாம்; ஆற்றலில் காளி! தூயவள் நெஞ்சினில்; துணிந்திடில் பகைவர்க்குத் தீயவள் திக்கெட்டும் பொசுக்குவள் விழிகளால்; கலையவள் நெஞ்சினில் நிறைவதில் கவின்மிகு மலையவள் அன்பிலென் கனவுகள் நிறைப்பதில்.. -March 2020

ஒரே குரல்.. ஒரே பாடல்..

  அந்த சிறிய ஒலிப்பதிவில் அவள் ஏதோ பாடுகிறாள்.. என்னவென்று விளங்கவில்லை.. ஆனால் அடிக்கடி கேட்கிறேன்.. சில நேரம் குதூகலமாய் சில நேரம் வெறுமையாய் சில நேரம் நிறைவாய் சில நேரம் துயராய் சில நேரம் குழப்பமாய் ஒரே குரல்.. ஒரே பாடல்.. புதிது புதிதாய் பிறந்து வருகிறது.. இதன் சூட்சமத்தைப் பிறகொரு நாள் புரிந்து கொண்டேன்.. தெளிந்த வானத்தின் வெள்ளை மேகமாக வெறுமனே காற்றில் ஊர்கிறது அவள் குரல்.. காணும் கண்களுக்கேற்றபடி யானையாய்.. எருமையாய்.. மாடாய்.. மனிதனாய்.. -March 2022

On a sudden Death

  அவன் திடீரென இறந்து போனதில் அதிர்ச்சி அடையாதவரே இல்லை.. காரணம் அவனுக்கு உடல் நலனில் பொறுப்பும் அக்கறையும் மிக அதிகம்.. புகை மது கிடையாது.. அனைத்திலும் ஒழுக்கமானவன்.. நேரத்துக்கு உண்பான் நேரத்துக்கு உறங்குவான்.. *அதிகாலை துயில் எழும் பழக்கம் உள்ளவன்.. காலையில் உடற்பயிற்சியும் மாலை யோகாவும் ஒருநாளும் தவறாது.. கடவுள் பக்தி நிறைய உண்டு.. சத்தான உணவுகளைத் தேடி தேடி உண்பான்.. அறுசுவை ஆகிலும் உடலுக்கு ஆகாதெனில் தீண்டவே மாட்டான்.. *பரம்பரை நோய் என்று எதுவும் இல்லை. ஆனாலும் வருடம் தவறாமல் முழு உடல் பரிசோதனை செய்வான்.. சர்க்கரையும் இரத்த அழுத்தமும் எப்போதும் சீராக வைத்திருப்பான்.. உள்ளூர் சிரிப்பு சபையில் இருந்தான்.. மனஅழுத்தத்தை அறவே தவிர்ப்பவன்.. *உணர்ச்சி வசப்பட்டு எதையும் செய்யாதவன்.. வண்டி ஓட்டும் போதும் கவனமாகவே இருப்பான்.. அதி வேகம் பிடிக்காது.. விதிகளை மீறுதல் எப்போதும் இல்லை.. *இப்படி ஒருவன் எப்படி இறக்க முடியும்?? வருத்தத்தைவிட குழப்பமே அதிகமாக இருந்தது.. மீண்டும் மீண்டும் உள்ளே ஒலித்தது இந்த ஒரே கேள்விதான்.. இப்படிப்பட்டவன் எப்படி இறக்க முடியும்..?? *நன்கறிந்த மருத்துவர் ஒருவரிட...