தெய்வங்கள் - சிறுகுறிப்பு

தெய்வங்கள் இரண்டு வகைப்படும்..
ஒன்று, சக்தி இல்லாத தெய்வங்கள்..
இரண்டு, சக்தி உள்ள தெய்வங்கள்.

சக்தி இல்லாத தெய்வங்களுக்கு
கோயிலோ, பூசைகளோ இருப்பதில்லை..
அவைகள் பெரும்பாலும்
ஆயுதங்கள் ஏந்தி அறியாதவை..
மனிதரோடு மனிதராக திரிந்தாலும்
எவராலும் கண்டுகொள்ளப்படாத
அற்ப தெய்வங்கள் இவை..


எந்நேரமும் எதையாவது
செய்துகொண்டு அலையும்
இந்த தெய்வங்களை
அடையாளம் காண்பதும் மிக எளிது.
ஒருநாள் நீங்கள் தெருவில் தவறி விழுந்து பாருங்கள்..
பதறி வந்து உங்களை தூக்கும் கரங்கள்
இந்த தெய்வங்களுடையதாகவே இருக்கும்..
மருந்து கொஞ்சம் அதிகமாகி
சாலை நடுவில் நீங்கள் சரிந்து கிடக்கையில்
திட்டியபடி ஒதுங்கி செல்வொருக்கு நடுவே
மூக்கை பொத்தியபடி உங்களை
ஓரமாக இழுத்து விட்டுவிட்டு
கடந்து சென்றதும் இந்த தெய்வங்கள்தான்..


சாதி மதம் இந்த தெய்வங்களுக்கு இருப்பதில்லை..
எவருக்காகவும் எந்நேரமும் கண்ணீர் விடக்கூடிய
கூறு கெட்ட தெய்வங்கள்..
காணிக்கை எதையும் இவைகள் ஏற்பதில்லை,
பசியுடன் இருந்தால் கூட..
உலகத்தின் பாரம் சுமக்கிறோம் என்ற
மனோவியாதி கொண்ட இந்த தெய்வங்கள்
சிலநேரம் தம் குடும்பங்களுக்கு மட்டும்
துர்கனவாகிப் போகும் கூத்தும் உண்டு..


சக்தி உள்ள தெய்வங்களுக்கு
கோயில், பூசை, திருவிழா, அலங்காரம்
அபிஷேகம், நைவேத்தியம் எல்லாம் உண்டு..
ஆயுதத்தை இவைகள் அரை கணமும் இறக்காதவை..
எனினும் அக்கிரமக்காரர்களிடம்
இவைகள் ஆயுதம் செலுத்தியதை
யாரும் பார்த்ததில்லை..


பெரிய கொயிலின் இருண்ட அறைக்குள்
எந்நேரமும் அமர்ந்தபடி,
தன்னை வண்டலூரின் சிங்கம் போல்
எட்டிப் பார்த்து வணங்குபவர்களைக் கண்டு
புன்னகைப்பதை தவிர்த்து
இவைகளுக்கு வேறு என்ன வேலை
என்று யாரும் சரிவர அறிந்ததாய்
நம்பத் தகுந்த தகவல் ஏதும்
இன்றுவரை இல்லை..

Comments

Post a Comment

Popular posts from this blog

கனவுலகம்

Be Present

ஓ மனமே..