உன்னை நீ அறிவாய்
ஒன்றுண்டு தர்மம் - இந்த
உலகத்தை அது இயக்கும்நன்றதனைத் தெளிந்ததனால்
நமனுக்கும் அஞ்சேன் யான்
கொன்றுண்டு வாழ்வதற்க்கு
குகைவாழும் மிருகமல்ல
நன்றுண்டு இரு கைகள்
நஞ்சிற்கும் பணியேன் யான்
பட்டங்கள் சிலநேரம்
பறவைகள் மேல் பறந்து
வட்டங்கள் அடிப்பதுண்டு
வாய்விட்டும் சிரிப்பதுண்டு
கொட்டம் அடிக்கையிலே
கொடி சற்றே அறுந்துவிடில்
நட்டம் எதற்கென்று
நன்கறிந்தால் துயரமில்லை
தொங்கும் சிரமெதற்கு?
துயரெதற்கு? பயமெதற்கு?
பொங்கும் மனத்துள்ளே
பொரிந்தெரியும் வலியெதற்கு?
மங்கும் விழியெதற்க்கு?
மடிகொண்ட உடலெதற்கு?
தங்காது என அறிந்தும்
தளராத பற்றெதற்க்கு?
எங்கும் சோதியுண்டு.
இருள் சூழ்ந்த நெஞ்சம் ஏன்?
தங்கும் அறிவிருக்க
தளர்ந்துவிடும் உள்ளம் ஏன்?
கங்கும் தோற்றுவிடும்
கதிரொத்த சிந்தை உண்டு
மங்கும் மிடிமை ஏன்?
மயக்கம் ஏன்? தயக்கம் ஏன்?
உன்னை நீ அறிவாய்
உனையன்றி யாரறிவார்?
கண்ணை நீ அறிந்தால்
காட்சியெலாம் தெளிவாகும்
மண்ணை நீ அளப்பாய்,
மடியுதைத்து நீ எழுந்தால்..
திண்ணை பேச்செதற்க்கு
தெளிவாய் எது உண்மையென ..!
மிச்சம் எதுவும் வைக்காதே
மீண்டும் இல்லை இவ்வாழ்க்கை
துச்சம் எதுவும் சத்தியம் முன்
துன்பமின்றி கொண்டாடு
அச்சம் என்று எதுவுமில்லை
அணுவளவும் கவலை இல்லை
மெச்சுமந்த இறையும் உன்னை
மேதினியைக் கொண்டாடு ..!
Vaazhthukkal Pulavarae....
ReplyDelete