வெந்து தணிந்தது..
கங்கை சிந்து காவிரியாய் -நீள்
கோதா வரியுடன் சரஸ்வதியாய்
பொங்கிய நதிகளை மாதர் என்பார்-நிதம்
போற்றியே அவை தினம் தொழுதிடுவார்
கலைமகள் மலைமகள் அலைமகளாய் -உயர்
காளியாய் மேரியாய் மாரியளாய் - புவி
கண்கண்ட தெய்வங்கள் யாவையுமே -இங்கு
காரிகை வடிவம் என்றுரைப்பார்
பாரத தாயையும் பெண் என்பார் - மிகை
பாரதர் அவள் பெறு பிள்ளை என்பார்
மரத்தையும் பசுவையும் பூமியையும்- தினம்
மாதர் என்றே அவர் கைதொழுவார்
ஈங்கிதைக் கேட்டு வையமெலாம் உள்ள
மங்கையர் யாவரும் பாரதத்தில் - வந்து
மாதராய் பிறந்திட ஏங்கி நின்றார் - மெய்
அறிந்தபின் அவரே மனம் பதைத்தார்
கருப்பை சுமப்பது பெண்ணை என்றால் -அந்த
கருவறை ஆனது கல்லறையாய்
அதற்கும் தப்பி அவள் பிறந்தால் -உயிர்
அறுத்தது நெல்மணி, கள்ளிப் பால்
வீட்டினில் பெண்டிரை பூட்டி வைத்தார் -பின்
வெளியினில் அனுப்பிட காவல் வைத்தார்
தீட்டு என்றே சொல்லித் தள்ளி வைத்தார் -வெறும்
மாட்டை விற்பதுபோல் மண முடித்தார்
கருப்பை சுமந்திடும் கடவுளவள் - அவள்
விருப்பை வெறுப்பை எவர் அறிந்தார்?
நெருப்பை நெஞ்சினில் பல காலம் - தம்
இருப்பென வலியுடன் அவள் சுமந்தாள்
பூமிகொள் தீயும் ஒரு நாளில்-பிளம்
பொங்கிட வெடிப்பது இயல்பல்லவோ
தங்கிய அவள் சினம் வெடித்திடவே -இன்று
ஓங்கிய புதுயுகம் பிறந்த தன்றோ.. !
சாதம் வடித்திட்ட அவள் கரங்கள் -இன்று
சரித்திரம் வடித்திடக் காண்கின்றோம் - புது
வேதம் படைத்திடும் மாதரவர் - மிகு
வீரத்தைக் கண்டு மெய் சிலிர்க்கின்றோம்
பாரத வீதியில் உலவுகிறாள் - உயர்
பாரதி கண்ட புதுமை பெண் - அவள்
வீதியை மறித்திட்ட விஷச் செடிகள் - இன்று
வெந்து தணிந்ததை காண்பீரே.. !
Comments
Post a Comment