சுயம் மற்றும் சில வேண்டுதல்கள்
பார்மீ தினில்யான் படுதலு மேனோ?
சீரது வெதுவென எமக்குள் பதித்தும்
சிதைப்பது மேனோ எம்சிறு வாழ்வை?
எண்ணிய தெய்திடும் உள்ளொளி தந்தீர்..
திண்ணிய னாக்கிட மறந்ததும் சரியோ?
பண்ணிய பாவ மெதுவென அறியேன்,
சென்னியின் சோதியைக் குடத்திலேன் இட்டீர்?
பிறந்ததை எதற்கென அறிந்திட செய்தல்
மறந்தது தகுமோ மனத்திடம் கேட்பீர்!
சிறந்தது வெதுவென அறிந்தும் யானுலகில்
கறந்ததை மறந்தேன் கள்ளினைக் கொண்டேன்?
எனைத்தான் மனத்துள் இருப்பீர் ஐயா,
உனைத்தான் மறந்துயான் ஏதினைப் பிடிப்பேன் ?
அணைத்தெனை யாண்டிட உன்னையும் அன்றி
துணையென பிறகொண் டெங்ஙணம் உய்வேன் ?
எந்தையே என்சொல் இக்கணம் கேட்பீர்
நிந்தனை எமக்கிலை உமக்கே யாகும்
சிந்தனை கொண்டும் யான் துயர்மிகக் கொண்டால்
வந்தனை உமக்காற்றி பீடென்ன சொல்மின்?
மோகத்தை யழித்தே மனத்திடை மண்டிட்ட
சோகத்தை ஒழித்தே சுகமதைத் தெளிப்பீர்!
தாகத்தை யாற்றிஎம் வாழ்விலே எஞ்சிய
பாகத்தை யாயினும் பயனதாய் செய்மின் !
Comments
Post a Comment