மண் பயனுற வேண்டும்: தாயிடம் வேண்டல்
மானுடனாய் இந்த தேசத்திலே -எந்த
மாதவத்தாலோ நான் பிறந்தேன்
மானத்திலே உயர் பாரதத்தாய் -அவள்
மடியினில் தவழும் வரம் அடைந்தேன்
எத்துனை மதங்கள் எத்துனை இனங்கள்
எத்துனை நிறங்கள் அவளிடத்தில் -பின்
எத்துனை மொழிகள் எத்துனை வழிகள்
எத்துனை விழிகள் அவள் முகத்தில்..!
ஐயிறு திங்களே எனைச் சுமந்தாள் -இங்கு
அணைத்தெனை வளர்த்திட்ட அன்னையவள்
ஆயுளெல்லாம் என்னை சுமக்கின்ற -இந்த
அருட்பெரும் தாய்க்குநான் ஏது செய்வேன்..?
தேடியே எங்கெங்கோ அலைந்து கண்ட-என்
தெய்வமே நீதான் பாரதமே -உனை
வாழ்த்திட வார்த்தைகள் எனக்கில்லை -தலை
வணங்கிட மட்டுமே நானறிவேன்
அன்னை பாரத தேவியளே -இங்கு
உன்னை நினைக்கவே உயிர் சுமந்தேன்
மணியே, மாதே.. மாசற்றோய் -என்
மண்ணே உனை நான் வேண்டுகிறேன்
மண் பயனுறுமொரு வாழ்வு கொண்டால்-அதில்
என்துயர் யாவையும் நான் மறப்பேன்-இந்த
மானுடம் பயனுறும் வாழ்வு தவம் -அதை
மறுக்கா தெனக்கே வரமருள்வாய்..
Vaazhthukkal Writer Anna.....
ReplyDelete