கொரோனோ என பரவலாக அறியப்படும் COVID-19. ஜனவரி நடுவில் சீனாவில் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட இந்நோய் இன்று உலகம் முழுக்க பெரும்பீதியைக் கிளப்பி வருகிறது. நாங்கைந்து நாள் தனிமைப்படுத்துதலுடன் கூடிய ஒரு நல்ல சிகிச்சையில் முற்றிலுமாக குணமாக்கக் கூடிய நோய்தான் இது. இந்த நோயின் மரண விகிதாச்சாரமும் இதே குடும்பத்தைச் சேர்ந்த முந்தைய நோய்களான சார்ஸ், மெர்ஸ் போன்றவற்றைவிட ஒப்பீட்டளவில் மிகக் குறைவே. என்றாலும் இந்த நோய் உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் அச்சுருத்தலாக மாறி இருப்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, காட்டுத்தீ போன்ற இதன் பரவும் வேகம். கடந்த நான்கு வாரங்க்களில் மட்டும் இந்த நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களில் இருந்து இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளது. இன்றைய தின நிலவரப்படி இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க 2,19,355. பலி எண்ணிக்கை 8969. சீனாவில் அதிகபட்சமாக 80,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3245 பேர் மடிந்துள்ளனர். நோயுற்று பின் அதிலிருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 85,745 பேர், இதனுடன் ஒப்பிட இறப்பு விகிதம் 9%. நோய்தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே முழுமையான பாதிப்பு தெரிய வரும். இந்த நோயின் முக்கிய சிக்கலே மருத்துவமனைகள் கொள்ளாத அளவுக்கு அதிவேகமாக நோயாளிகளை உருவாக்குவதுதான். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் என அனைவருக்கும்,  இந்த நோய் அதிகம் பரவியுள்ள இத்தாலி, இரான் போன்ற நாடுகளில் பெரும் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. படுக்கைகள், மருந்துகள் எதுவும் போதவில்லை. மருத்துவ ஊழியர்களுக்கும் தொற்று ஏற்படுவதால் சிக்கல் மேலும் அதிகமாகிறது. இதன் காரணமாக பிழைக்க வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், கண்ணெதிரில் பல உயிர்கள் மடிவதை கண்டும் எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் உள்ளதாகவும் இத்தாலிய மருத்துவர் ஒருவரின்  கட்டுரை வாட்ஸப்பில் பகிரப்படுகிறது.
மக்களின் பீதிக்கு இரண்டாவது முக்கிய காரணம் வெகுஜன ஊடகங்களும் சமூக ஊடகங்களும். இவை தொடர்ந்து வதந்திகளை கொரோனோவை விட வேகமாகப் பரப்பி அபாயத்தை அதிகமாக்குகின்றன. கடந்த இரு வாரங்களில் பகிரப்பட்ட வாடஸப் செய்திகளில் தொண்ணூறு சதவிகிதம் கொரானா தொடர்பானவையே. கனவுகளில் கூட இன்று மக்கள் கொரோனோவையே காண்கிறார்கள். நோயைவிட இந்த பீதியே கொடுமையானதாக உள்ளது. இந்தியாவில் 171 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பலி எண்ணிக்கை 3. உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனோ தொற்று ஓரளவு கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்திய சீதோஷ்ண நிலையும் அதற்கு பேருதவி செய்வதாக தோன்றுகிறது. நோய்தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு மார்ச்சு 16 முதல் 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. திரையரங்குகள், வணிகவாளாகங்கள் மூடப்படுள்ளன. பொது விழாக்கள், போராட்டங்கள் போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்படுள்ளது.  படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 85 ரயில்கள் கூட ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச விமான நிலையங்கள் தீவிர கண்கானிப்பில் உள்ளன.
வழக்கமான ப்ளூக் காய்ச்சலைப்போல கொரோனோவும் கைகளில் இருந்து கண்கள், மூக்கு, வாய் மூலமாக பரவுவதாகத் தெரிகிறது. நோயுற்றவரின் இருமல் மற்றும் தும்மலில் தெறிக்கும் மிகச்சிறிய துமிகளின் மூலம் பரவுவதும் இந்த நோய் மிகவேகமாக பரவுவதற்கு முக்கிய காரணம். மக்கள் அடிக்கடி கைகளைக் கழுவவும், நோய் தொற்று அபாயம் உள்ள இடங்களில் கையுறைகள், மாஸ்க் பயன்படுத்தவும் தொடர்ந்து அறிவுருத்தப்படுகிறார்கள். காய்ச்சல், சளி, இருமல்,  தும்மல், தொண்டை எரிச்சல் மற்றும்  மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நலம். குழந்தைகள், வயதானவர்கள், நோயெதிர்ப்பு குறைந்தவர்கள் இந்த நோயின் முக்கிய இலக்காவதால் அவர்கள் வீட்டிலேயே இருப்பது நன்று. நோய்த்தீவிரம் குறையும் வரை வீட்டில் இருப்பதும், தொற்று ஏற்படாமல் கவனமாக இருப்பதும் வந்தபின் குணப்படுத்துவதை விட சாலச் சிறந்தது. மற்றபடி பீதி கொள்ள அவசியம் இல்லை என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

Comments

Popular posts from this blog

அன்னமய்யா

சொல்லடா பிரகாசா