மாரியம்மன் கோயில் தெரு மாயவினாயகர் மகாத்மியமும் 90's கிட்ஸ் வாழ்க்கையும்

Image result for ganesh lord
ஒரு செப்டம்பரின் மாலை நேரம், அனேகமாக  1996 ஆக இருக்கலாம். சந்தைத் தோப்பு மைதானத்தில் நானும் தெரு நண்பர்களும் கிரிக்கெட் விளையாடிக்  கொண்டிருந்தோம். விளையாட்டு தொடங்குவதற்கு முன்பான பேச்சு ராஜவீதிப் பையன்கள் வைக்கும் பிள்ளையார் சிலை குறித்தானதாக இருந்தது. ராஜவீதியின் குடும்பங்கள் ஓரளவு வசதியானது. அவர்களில் பெரும்பாலோர் பெங்களூரில் சொந்தங்களைக் கொண்டவர்கள். அவர்களின் பிள்ளையார் சிலை வைக்கும் பழக்கம் பெங்களூர் நகரத்தில் இருந்து வந்ததாக இருக்கலாம். அந்த பையன்களும் அவர்கள் வைக்கும் சிறிய பெயிண்ட் சிலைகள் பெங்களூரிலிருந்து வாங்கி வரப்பட்டதாகச் சொல்லுவார்கள். 3 நாட்களோ அல்லது 5 நாட்களோ தினமும் இரவில் பூசை செய்வார்கள். கடைசி நாள் சிலையை நன்கு அலங்கரித்து சைக்கிள் கேரியரில் வைத்து ஏதேதோ புரியாத கன்னட கோசங்களுடன் ஊர்வலம் வருவார்கள். கடைசியாக பிள்ளையார் கோயில் கிணற்றிலோ அல்லது அன்புபிரியாள் கோயில் கிணற்றிலோ சிலையைப் போட்டுவிட்டு பிரசாதம் தருவார்கள்.இந்த மொத்த நிழ்வுகளும் பெரியவர்கள் தலையீடின்றி சிறுவர்களே செய்வார்கள். "அவங்க எல்லா வீட்டிலயும் காசு வசூல் பண்றாங்கடா" என்று மணி சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. எங்களுக்கெல்லாம் எங்கள் சொந்த வீட்டிலேயே இதற்கெல்லாம் பைசா தரமாட்டார்கள் என்று திடமாக நம்பினோம். ஆனாலும் அந்த சிறுவர்களுக்கு அந்தக் குறிப்பிட்ட நாட்களில் கிடைக்கும் முக்கியத்துவமும் மரியாதையும் எங்களை லேசாகப் பொறாமை கொள்ளச் செய்தது என்றுதான் சொல்ல வேண்டும். நாங்களும் அந்த முக்கியத்துவத்தை எங்கள் தெருவில் அடைய விரும்பினோம்.

"நாமளும் தெருவில் சிலை வைக்கலாமா?" என்று நான் கேட்டபோது மணி நம்பிக்கையின்றி பார்த்தான். எனக்கும் நம்பிக்கை இல்லைதான். ஆனால் ஆசையாக இருந்தது. "அவங்க சிலை 100 ரூபாயாம் தெரியுமா? காசு இருந்தாலும் நமக்கு யாரு பெங்களூரில் இருந்து வாங்கிவார்கள்?" என்று அவன் சொன்னது ஆகுற கதையை பேசு என்பது போல் இருந்தது. நம்ம ஊர் குயவர் தெருவிலும் களிமண் சிலைகள் செய்வார்களே அவர்களிடம் கேட்டால் செய்து தரமாட்டார்களா என்று தோன்றியது. மணியிடம் இதைச் சொன்னதும் அவன் ஆமோதித்ததுடன் உடனடியாக குயவர்தெருவுக்கு அழைத்துச் சென்றான். இரண்டு மூன்று வீடுகளில் கேட்டபின் ஒருவருக்கு இது வேடிக்கையாகத் தோன்றியதால் செய்துதர சம்மதித்தார்,  20 ரூபாய் ஆகும் எனும் நிபந்தனையுடன். 20 ரூபாய் எங்கள் சத்துக்கு மீறிய பணம்தான்.யாரிடம் கேட்பது?  வீட்டில் அப்பா தவிர யாரும் இல்லை. அவரிடம் இதைச் சொல்லி பணம் கேட்கும் துணிச்சல் எனக்கு இல்லை. மணிக்கோ வாய்ப்பே இல்லை, தொலைத்துவிடுவார்கள். சிலை செய்து தருவதாக சொன்னவரிடம் பணம் கொண்டு வருவதாக சொல்லிவிட்டு வந்தோமே  திட்டம் ஏறத்தாழக் கைவிடப்பட்டது. இதைப்பற்றி மேற்கொண்டு பேச விருப்பம் இன்றி தவிர்த்ததுடன், ஏமாற்றமில்லை என்பதை காட்ட கிரிக்கெட் விளையாடவும் முடிவு செய்தோம்.

கிரிக்கெட் நடந்து கொண்டிருந்தாலும் மனம் விளையாட்டில் செல்லவில்லை. மீண்டும் மீண்டும் பிள்ளையாரைச் சுற்றியே வட்டமிட்டது. நானோ சும்மாவே விளையாட்டில் சொதப்புபவன் வேறு. கைக்கு வரும் பந்துகளை விட்டுவிட்டு, கோழி போல விரட்டிச் சென்று அது நின்றபின் எடுத்து பவுலர் இருக்கும் திசைக்கு 40 பாகைகள் தள்ளி எறிவதுதான் என் வழக்கமான பீல்டிங் ஸ்டேட்டர்ஜி. அன்றும் கைக்கு வந்த லட்டு கேட்சை வெற்றிகரமாக விட்டுவிட்டு கோழி துரத்தி ஓடினேன். பந்து நின்ற இடத்தில் பந்துக்கு மிக அருகில் நாணயம் ஒன்று கிடந்தது கண்டதும் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. மணிதான் இந்த விஷயங்களில் அதிர்ஷ்டசாலி. அவனுக்கு அடிக்கடி தரையில் பணம் கிடைக்கும். அதெப்படி கிடைக்கும் என்று அதிசயிக்க வேண்டாம். அந்நாட்களில் சுற்று சுவர் கூட இல்லாத எங்கள் பள்ளியைச் சுற்றிதான் வாரச்சந்தை கூடும். நூற்றுக்கணக்கான கடைகளுடன் ஏராளமான சில்லறைப்பணம் புழங்கும் இடம் அது. இரவானதும் கடைக்காரர்கள் சிம்னி விளக்கொளியில் கடைகளை காலி செய்துவிட்டு அவசரமாக மாட்டு வண்டிகளில் ஏற்றுவார்கள்,  அப்போது சில்லறைக் காசுகள் தவறுவதும், அவை அடுத்த சில நாட்களில் பள்ளியைச் சுற்றி விளையாடும் பிள்ளைகளுக்கு கிடைப்பதும் வாடிக்கைதான். அன்று எனக்கு அதிர்ஷடம். 50 பைசா போலத் தெரிந்தது. 50 பைசாக்களுக்கு இரண்டு ஆசை சாக்லெட்களோ, ஒரு லேக்டோ கிங்கோ கிடைக்கும். ஆனால் நான் அவற்றைத் தேர்ந்தெடுக்க மாட்டேன். தேங்காய் மிட்டாயோ, ஆர்லிக்ஸ் மிட்டாயோ வாங்கினால் 10 கிடைக்கும். சிலதை பசங்களுக்கு தந்தாலும் மீதத்தை இரண்டு மணி நேரம் ஒவ்வொன்றாய் ருசிக்கலாம். மொறு மொறு போட்டி வத்தல் வாங்கினால் விரல்களில் மாட்டிக் கொண்டு ஒவ்வொன்றாய் கொறிக்கலாம். கையில் காசை எடுப்பதற்குள் மனது பல கணக்குகளைப் போடத் தொடங்கிவிட்டது.

எவரும் கவனிக்கிறார்களா என நோட்டம் விட்டப்பின் கல்லை எடுப்பது போல கேஷுவலாக குனிந்து காசை எடுத்தேன். நாணயம் தடிமனாகவும், கனமாகவும் இருப்பது ஆச்சர்யமாக இருக்கவே ஓரமாக கொண்டு சென்று அதை உற்றுப்பார்த்தால், அதில் நானறிந்த 50 க்கு பதிலாக  வெறும் 5 என்று எழுதியிருந்தது ஏமாற்றமாக இருந்தது. இது என்ன காசு? வெறும் 5 போட்டிருக்கிறதே? கடையில் இதற்கு மிட்டாய் தருவார்களா என்றெல்லாம் ஓடிய யோசனைக்கு நடுவே ஒருவேளை 5 ரூபாயாக இருக்குமோ என்ற எண்ணம் எழுந்து தூக்கிவாரி போட்டது. 5 ரூபாய் நாணயம் அப்போதெல்லாம் மிக அரிது. குறிப்பாக சிறுவர்கள் கையில் நாலணாவுக்கு மேல் காண்பதே அபூர்வம். மீண்டும் உற்றுப் பார்த்து அது 5 ரூபாயாய் தான் இருக்கும் என்று உறுதியாக தோன்றினாலும் மனம் நம்ப மறுத்தது. மணியை அருகழைத்து மெதுவாக எனக்கு பணம் கிடைத்த விஷயத்தைச் சொல்லி நாணயத்தைக் காட்டினேன். கண்கள் விரிய நாணயத்தைப் பார்த்த அவன் அது 5 ரூபாய்தான் என உறுதி செய்தான். மனத்தில் மகிழ்ச்சியும் அச்சமும் குழப்பமும் ஒருசேரக் கிளம்பி அமைதியைக் குலைத்தது. எனக்கு நாலணா எட்டணா கிடைப்பதென்பதே தவறியும் நடந்தது இல்லை.  நிறைய முறை என் பின்னால் வந்த மணி தரையில் பணம் கிடப்பதை கண்டெடுத்து காட்டும் போது, அது என் கண்ணில் படாததை நினைத்து வருத்தமும் அவன் மீது பொறாமையும் எழும். ஆனால் இன்று நிறைய மாணவர்கள் விளையாடும் ஓரிடத்தில், அதுவும் சந்தை முடிந்து இரண்டு நாட்கள் கழிந்தபின் எனக்கு பணம் கிடைப்பதும் அதுவும் அரிதான 5 ரூபாய் நாணயம் முழுதாக கிடைப்பதும் எனக்கேதோ பெரும் அற்புதமாகத் தோன்றியது. மணியும் அதை ஆமோதிப்பதுபோல தனக்கே அதிகபட்சம் ஒரு ரூபாய்க்கு மேல் எப்போதும் கிடைத்ததில்லை என்றான் ஏமாற்றத்துடன் உதடு பிதுக்கியபடி.

அற்புதம் என்றவுடன் எனக்கு பிள்ளையார் ஞாபகம்தான் வந்தது. ஊர்த் திருவிழாவில் இரவு டெக்கில் படம் போடும் போது எப்போதும் முதல் படமாக 'பிள்ளையார் பெருமை'தான் போடுவார்கள்.சில வாரங்களுக்கு முன்புதான் கடைசியாகப் பார்த்தேன். ஏதானும் அற்புதங்கள் நிகழ்த்திவிட்டு பிள்ளையார் ஆகாயத்தில் நின்று பார்த்து தலையை தலையை ஆட்டி வயிறு குலுங்க சிரிப்பது நினைவுக்கு வந்தது.  என்னையறியாமல் வானத்தை அண்ணாந்து பார்த்து நோட்டமிட்டபோது அங்கு பிள்ளையார் இல்லாதது சற்று ஏமாற்றமாக இருந்தது. கடைக்கு போகலாமா என்று பிள்ளையாரின் பெருமை தெரியாமல் அப்பாவியாகக் கேட்ட மணியின் வெகுளித்தனத்தைப் பார்க்க பாவமாக இருந்தது. நாங்கள் பிள்ளையார் சிலை வாங்க சென்று பணம் இல்லாமல் திரும்பி வந்ததும், பிள்ளையார் அதைப்பார்த்து நமக்கு உதவ இந்த பணத்தை எனக்கு பந்து மூலம் காட்டியதையும் நான் அவனுக்கு விரிவாக விளக்கிப் புரியவைத்ததும் அவன் சிலிர்த்துப் போனான். ஆனாலும் வெறும் 5 ரூபாயைக் காட்டினால் மீதி ரூபாய்க்கு என்ன செய்வது என்று அவன் தர்க்க ரீதியாகக் கேட்டது என்னையும் சற்று குழப்பத்திற்குள்ளாக்கியது. ஆனாலும் பிள்ளையாரே நமக்கு நெருங்கி வந்து உதவும் போது என்ன கவலை? வீட்டில் போய் கேட்போம் என்று துணிந்து கிளம்பினேன். வீட்டில் எல்லோரும் உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு போயிருந்தார்கள். அப்பா மட்டும்தான் இருந்தார். அவரிடம் போய் தயங்கி தயங்கி பிள்ளையார் சிலை வாங்க பணம் கேட்டேன். அவர் மறுத்தால் எனக்கு நடந்த அற்புதத்தைச் சொல்லி பைசா கேட்பதாக உத்தேசம். ஆனால் அதற்கு அவசியம் நேரவில்லை. ஒரு சில கேள்விகளுக்குபின் பாக்கெட்டில் கைவிட்டவர் முழுதாக 10 ரூபாய்த்தாள் ஒன்றை எடுத்து நீட்டியபோது எனக்கு இரண்டாம் முறையாய் உடம்பு சிலிர்த்தது..

அடுத்த 5 நிமிடத்தில் நானும் மணியும் மீண்டும் குயவர் தெருவில் இருந்தோம். சிலை செய்து தர ஒப்புக் கொண்டவரிடம் எங்களிடம் 15 மட்டும் இருப்பதாக சொன்னதும் உடனே அவர் ஒப்புக் கொண்டதற்கு மூன்றாம் முறையும், ஒரு அழகான சிலையைச் செய்து எங்களிடம் தந்தவர் 10 ரூபாய் போதும், மீதி ரூபாயை பூஜைக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றபோது நான்காம் முறையும் எனக்கு உடம்பு சிலிர்த்தது. 'போதும் வினாயாகா, ஒரு நாளில் ஒரு சின்னப் பையனுக்கு நாலு சிலிர்ப்பே அதிகம்' என்று மானசீகமாக வேண்டியும் அவர் நிறுத்துவதாக இல்லை. அரைகுறையாய் காய்ந்த சிலையை நாங்கள் இருவரும் மனையுடன் பிடித்து வந்தபோது மாரியம்மன் கோயில் சாவியை வைத்திருக்கும் கடைக்காரர் கோயிலிலேயே வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள் என்றதுடன் முதல் நாள் பூஜை என்னுடையது என்று கூறி மீண்டும் சிலிர்க்க வைத்தார். தொடர்ந்து பலரும் செலவுக்குப் பணமும், பூசைக்கு பொருட்களையும் பக்தியுடன் கொணர்ந்ததும், சிறுவர்களாகிய எங்களை முதல் முறையாக மரியாதையாகப் பார்த்ததும் மறக்க முடியாத சிலிர்ப்புகள். இப்படியாக எங்கள் தெருவின் மாய வினாயகர் (மாரியம்மன் கோயில் தெரு மாய வினாயகர்! Name Courtesy: பாலாஜி) முதல் முறையாய் எழுந்தருளினார்.

நாங்களும் எங்கள் பயபக்தியான பூசையாலும், பஜனை பாடல்களாலும் மூன்று நாட்கள் பிள்ளையாரை பதிலுக்கு சிலிர்க்கவைத்தோம் என்றுதான் சொல்லவேண்டும். மூன்றாம் நாள்  கிணற்றில் பிள்ளையாரைக் கரைத்துவிட்டு (களிமண் சிலை அதற்குள்  விரிசல் விட்டு பலவீனமாக ஆகிப்போனது) பிரிவின் கண்ணீருடன் வீடு திரும்பிய பிள்ளையார் கோஷ்டி அனேகமாக நாங்களாகத்தான் இருப்போம். அதன் பின் 12 ஆண்டுகளுக்கு மேலாய் புதிது புதிதாய் பிள்ளையார் எங்கள் தெருவுக்கு விஜயம் செய்து கொண்டிருந்தார். நாங்களும் வளர்ந்தோம். வாழ்வைத்தேடி ஆளுக்கு ஓரிடம் போனோம்.

நாங்கள் சென்றபின் எங்களின் அடுத்த தலைமுறை 2k கிட்ஸ் இதைத் தொடர்ந்தார்கள். ஆனால் இந்த நிகழ்வுகளில் சுவாரசியமற்று இருக்கவே சுவாரசியம் கூட்ட தங்கள் விருப்ப நடிகரின் படத்துடன் பெரிய பேனர்கள் கட்டினார்கள். அவ்வப்போது கோஷ்டி பிரிந்து தங்களுக்குள் சண்டையும் போட்டுக்கொண்டார்கள். பிறகு அதிலும் சுவாரசியம் குறையவே, நிகழ்வை முற்றிலுமாகக் கைவிட்டார்கள். இன்று தெருவில் வழக்கமாக  நாங்கள் பிள்ளையார் வைக்குமிடம் வெறுமையாகக் கிடந்தது. 'நல்லதுதான். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை கணக்கில்லாமல் கரைத்து ஏரி குளங்களை மாசு படுத்துவதற்கு சிலை வைக்காமல் இருப்பது மேல்' என்று மனதைத் தேற்றிக் கொண்டாலும் மனம் சற்று பாரமாகத்தான் உள்ளது.. 19ஸ் கிட்ஸ் ஆயிற்றே.
ஜெய் விக்னவினாயக மூர்த்திக்கு... ஜே..

Comments

Popular posts from this blog

அன்னமய்யா

சொல்லடா பிரகாசா