மெஹர்




பிரபஞ்சனின் யாசுமின் அக்கா சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கதை பாயம்மா. இஸ்லாமிய நெறி தவறாமல் இறையச்சத்துடன் வாழும் குடும்பம் பாயம்மாவினுடையது. ஒரு மகள். அவளுக்கு சில ஆண்டுகள் வயதில் இளைய ஒரு மகன். மகளின் திருமணம் தவிர அல்லாஹ்விடம் வேறு கோரிக்கை ஏதும் மெஹருக்கு (பாயம்மா) இல்லை. ஆனால் நகைக்கடை விற்பனையாளனான அவள் மகனின் சொற்ப வருமானத்தில் யாசுமினின் திருமணத்தை நடத்துவதா, ஒழுகும் வீட்டுக் கூரையை சரி செய்வதா? ஏழ்மை எப்போதும் விருந்தாளியாய் தங்கியுள்ள அந்த வீட்டில் எளிய ஆசைகளும் பெருங்கனவுதான்.

இறுதியாய் யாசுமினுக்கு ஒரு வரன் அமைகிறது. சேர்த்து வைத்த சிறிது நகைகள் நம்பிக்கை அளித்தாலும் ரொக்கம், நிக்காஹ் செலவு, நிக்காஹ்க்கு முன் கூரை வேய என பணத் தேவை கூடுகிறது. பாயம்மாவின் தன் துயரங்களை மகன் மேல் ஏற்றுகிறாள். அவன் வயதில் சிறியவன். தாயின் சுமைகளைத தான் சுமக்கும் அன்பு நிறைந்தவன். ஆனால் இந்த தொகை அவன் சத்துக்கும் மீறியதாயிற்றே?

 மார்க்க வழி வந்த ஒழுக்கம், நேர்மை எல்லாம் அவன் தேவைகளுக்கு முன் மெதுவாய் கரைகிறது. அவன் நேர்மையின் மீது அபார நம்பிக்கை கொண்ட அவன் முதலாளியிடம் திருடுகிறான். அந்த பணத்தை தம் தாயிடம் தர பயந்து ஒழிக்கிறான். ஏதேச்சையாக அந்த பணத்தைப் பார்த்துவிடும் பாயம்மா உடைந்து போகிறாள். நெறி தவறாத தன் மகன் சாத்தானிற்கு மனத்துள் இடமளிக்க தானும் காரணம் என குற்ற உணர்வும் கொள்கிறாள். மகனிடம் திருடினாயா எனக் கேட்க அவளுக்கு துணிவில்லை. அந்த பணமோ சாத்தானின் சிரிப்பாய் அவளை பயமுறுத்துகிறது. பணத்துடன் காவல் நிலையம் செல்கிறாள்.தன் மகன் திருடிவிட்டான், இந்த பணத்தை உரியவரிடம் ஒப்படையுங்கள், என் மகனை மன்னியுங்கள் என மன்றாடுகிறாள். பின் என்ன நடந்தது என்பது பாயம்மாவின் கதைச்சுருக்கம்.

நெகிழ்ச்சியான இந்த கதை வாணியம்பாடியில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாம். என் பள்ளி நாட்களில் (துணைபாட நூலில் வாசித்தது) என்னை பெரிதும் இந்த கதையை முதுகலை படிக்கையில் ஒரு குறு நாடகமாக எழுதினேன். கல்லூரி ஆண்டுவிழாவில் மேடையேறற விரும்பி. எழுதி முடித்தபின் திருப்தி இல்லை. இதை என்னால் இயக்க முடியாது என்றும் தோன்றியது. சில பல முயற்சிக்கு பின் பல நடைமுறைஸ் சிக்கல்களால் கைவிடப்பட்டது.

 சமீபத்தில் பாயம்மா சிறுகதை விஜய் சித்திரம் பகுதியில் ஒரு படமாக வந்துள்ளதை முகனூல் வாயிலாக அறிந்து தேடிப் பிடித்து பார்த்தேன்.  தாமிரா இயக்கியுள்ள அந்த படத்தின் பெயர் மெஹர். சுமார் 1.30 மணி நேர படமாக மெஹர் மிகச் சிறப்பாக வந்துள்ளது. சிறுகதையை விடச் சிறப்பாக என்று தைரியமாக சொல்லலாம். குறிப்பாக சொல்வதானால் சிறுகதை பாயம்மா பாத்திரத்தின் வாயிலாக மட்டும் ஒற்றைப் பார்வையில் இருக்கும். மெஹர் படமோ இருவேறு பார்வைகளில் உள்ளது. ஒரு புறம் பாயம்மாவின் கவலை, விருப்பம், துயரம் என்றால், மறுபுறம் அவள் மகனின் அன்பு, பொறுப்பு, நேர்மை, குழப்பம், குற்ற உணர்வு. இதற்கிடையில் யாசுமினின் வலியும் பதியப்பட்டுள்ளது, இஸ்லாமிய வாழ்வியலும் மண்மணத்துடன் பதியப்பட்டுள்ளது. படத்தின் நீளம் சில இடங்களில் உருத்தினாலும், நேர்மையான நேர்த்தியான படைப்பு என உறுதியாகச் சொல்லலாம். 

Comments

Popular posts from this blog

அன்னமய்யா

சொல்லடா பிரகாசா