பால்யம்

தொடக்கப் பள்ளி நாட்களில் நாலணாவை கையில் வைத்துக்கொண்டு மிட்டாய் வாங்க நான் நிற்கும் கடை இன்று முற்றிலுமாக இடிக்கப் பட்டிருப்பதைக் கண்டேன்.

தாத்தாவின் பொடி முதல் வீட்டின் மளிகைத் தேவைகள் வரையென சில ஆயிரம் முறைக்குக் குறையாமல் நான் அந்த கடை முன் நின்றிருப்பேன். இன்று, வெறித்த அந்த இடம், நின்று யோசிக்க நேரம் தொலைத்துபோன என் பால்யத்தை எனக்கு மீண்டும் நினைவூட்டியது. களைத்த தேன் கூடாய் எழுந்து பறக்கும் பலநூறு நினைவுகள்.
புதையலை வழியில் தொலைத்தவன் போல வெறியுடன் ஊரைச் சுற்றி வருகிறேன். என் ஊரே இன்று எனக்கு அந்நியமாய்த் தெரிகிறது.

ஊரே கதி என்று நான் வாழ்ந்த காலத்தில் எதெல்லாம் என் ஊரின் முகம் என்று எனக்கு தோன்றியதோ அதிலெல்லாம் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றி விட்டர்கள். இந்த புதிய முகம் முன்பை விட அழகாக இருந்தாலும் இது எனக்கு அந்நியமானதே.  

என் பள்ளி இன்று என் பள்ளியாய் இல்லை. என் நண்பரகள்  யாரும் இன்று ஊரில் இல்லை.  பிரதான சாலை முதல் சந்து பொந்து வரை எல்லாம் வேறு வேறாய். அன்று ஒவ்வொரு சந்தையும் அடையாளப்படுத்திய பல வயதான முகங்கள் தாங்கள் மடிந்த செய்தியை மட்டும் மிச்சம் வைத்து காணாமல் போயுள்ளன. இத்தனைக்கும் நான் மாதம் இரண்டு நாளாவது  கண்டிப்பாக ஊருக்கு வருகிறேன். ஆனால் இந்த மாற்றங்களை நின்று கவனித்ததே இல்லை.

அதோ அங்கிருந்த சுவரைத் தாண்டி குதித்தால் ஏராளமாக கொவ்வைத்தலை கிடைக்கும், என் பாடப் பலகையை பசுமையாக்க.
அதோ அப்போது அங்கிருந்த கடையில் கோயில் அடுப்பில் கூட்டான்சோறு ஆக்க கடைக்காரருக்கு தெரியாமல் ஒரு பிடி அரிசி எடுத்து வருவோம்.

 இந்த சந்துகளில் எல்லாம் நாங்கள் நேரம் போவது தெரியாமல் பம்பரம் ஆடி உள்ளோம். அதோ அந்த வீடு இருந்த இடம் அன்று வெட்டவெளி. அந்த வெளியில் வெயில் கால பகல் வேளைகளில் தோன்றும் சுழிக்காற்றை நோக்கி பைத்தியம் போல் ஓடுவோம்.

இதோ இந்த கடைகள் உள்ள இடம் காலியாய் இருந்த காலத்தில், பிள்ளைகள் எந்நேரமும் கோலி விளையாடிக்கொண்டிருபார்கள். ஒரு விடுமுறை நாளில் காலை முதல் மாலை வரை மதிய உணவுகூட இல்லாமல் என் அண்ணன் அடிக்கும் கோலியை நேரம் போவது தெரியாமல் சேகரித்து கொண்டிருந்திருக்கிறேன். விளையாட்டு முடிந்து வீடு திரும்புகையில் அம்மாவின் அடியை ஏற்க முழுமனதுடன் தயாராகியதுடன்,  ஜெயித்த நூற்று சொச்சம் கோலிகளை அம்மாவிடம் இருந்து காப்பாற்ற எங்கு ஒழிப்பது என் று திட்டமிட்டபடி நானும் அண்ணனும் இந்த சந்து வழியாகத்தான் வீட்டுக்கு நடந்தோம்.

இங்கிருந்த கடையில்தான் வாடகைக்கு சிறிய சைக்கிள்களை எடுப்போம். அதை நாங்கள் ஓட்டிய நேரத்தை விட நேரம் முடிந்துவிட்டதா என கடிகாரத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம்தான் அதிகம்.

இப்படி ஒவ்வோரு இடமும் தரும் நினைவுகளுக்கு முடிவே இல்லை. ஊரை ஒரு முறை சுற்றி வந்த போது, ஏமாற்றமும் நிறைவும் ஒருங்கே மனதைச் சூழ்கிறது.  பின் இதென்ன முட்டாள் தனம்? எதற்க்கு என் மனம் இப்போது வெறுமை கொள்கிறது. மாறிப் போன என் ஊருக்காகவா..? இல்லை, இனி கிடைக்கப் பெறாத என் பள்ளி நாட்களுக்காகவா?

''இந்த தட்டுகளில்
ரோஜக்களை நிரப்புவோம்..
அரிசிதான் இல்லையே..!''
-ஒரு ஜப்பானியக் கவிதை    

Comments

Popular posts from this blog

அழிவின் ஞானம்

Be Present

கனவுலகம்