காளி தேவியை நரேந்திரர் ஏற்றுக்கொண்டதை ஸ்ரீராம கிருஷ்ணர் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகக் கருதினார்.

ஏன்? காளி-மயானம், சுற்றிலும் எரிகின்ற பிணங்கள், பேய்களின் கோரத் தாண்டவம், நரிகளின் ஊளைச் சத்தம், விரித்த கூந்தல், ரத்தம் சொட்டத் தொங்கும் நாக்கு, மனிதத் தலைகள் கோர்த்த மாலை, கையில் ரத்தம் சொட்டும் வாள், வெட்டப்பட்ட தலை, சிவபெருமானின் மார்புமீது நிற்கின்ற கோலம் இது அவளது தோற்றம்! வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டுகின்ற ஒரு சின்னமாக விறங்குகிறாள் அவள். இன்பமும் இதயமும் இனிமையும் அழகும் ஆனந்தமும் மட்டும் கலந்தது அல்ல வாழ்வு. வாழ்விற்கு மறுபக்கம் ஒன்று உள்ளது. துன்பமும் துயரமும தீமையும் கோரமும் அழுகையும் நிறைந்தது அது. அது எங்கிருந்து வந்தது? சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளிலேயே அதனைக் கேட்போம்.

தீமை ஏன் உள்ளது? இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி நன்மை, தீமை இரண்டையும் கடவுள் படைத்தார் என்று கொள்வதே.... இறைவன் எப்போதும் நல்லவரேயானால், இந்தத் தீமையனைத்திற்கும் பொறுப்பாளி யார்? சாத்தான் என்று ஒரு பேர்வழி இருப்பதாகக் கிறிஸ்தவரும் முகமதியரும் கூறுதின்றனர். இரண்டு பேர்வழிகள் செயல்படுவதாக எப்படிச் சொல்ல முடியும்? ஒருவர் மட்டுமே இருக்க இயலும்... குழந்தையைச் சுடுகின்ற தீயே சமையல் செய்யவும் பயன்படுகிறது. தீ நல்லது என்றோ, தீயது என்றோ எப்படிச் சொல்வீர்கள்? அதைப் படைத்தவர் வேறுபட்ட இருவரென்று எப்படிச் சொல்ல முடியும்? தீயதென்று சொல்லப்படுவதையும் படைத்தவர் யார்? கடவுளே. வேறு வழியில்லை! மரணத்தையும், வாந்திபேதி முதலிய தொற்று நோய்கள் அனைத்தையும் அவரே அனுப்புகிறார்.
ஆண்டவர் அத்தகையவரானால் அவர் நல்லவர், அவரே தீயவர்; அழகுள்ளவரும் அவரே, பயங்கரமானவரும் அவரே: வாழ்க்கையும் அவரே, மரணமும் அவரே. அத்தகைய கடவுளை வழிபடுவது எப்படி? பயங்கரமானதை உண்மையாகவே வழிபட ஆன்மா எப்படிக் கற்றுக் கொள்ளும் என்பதை நாம் அறிந்து கொள்வோம். அப்போதே அந்த ஆன்மா அமைதி பெறும். உங்களுக்கு அமைதி இருக்கிறதா? நீங்கள் கவலைகளை விட்டு விட்டீர்களா? திரும்புங்கள். முதலில் பயங்கரத்தை எதிர் கொள்ளுங்கள். முகமூடியைக் கிழித்தெறியுங்கள். அதே கடவுள் அங்கிருப்பதைப் பாருங்கள். நன்மையாகத் தோன்றுபவரும் தீமையாகத் தோன்றுபவரும் உருவக் கடவுளாகிய அவரே. வேறு ஒருவரும் இல்லை.
இந்த உண்மையை நரேந்திரர் கண்டுகொண்டார். இது வாழ்க்கையைப் பற்றிய அவரது கண்ணோட்டத்தை முழுமையாக்கியது. பின்னாளில் உலக குருவாகத் திகழ இருந்த அவரது பார்வை பூரணத்துவம் பெற்றது.
Comments
Post a Comment