வானம் வசப்படும்



அன்றொரு நாள்நம் பாரதத் தாயவள்
அந்நியன்  சிறையினில் நொந்தாள்
ஆற்றலை மறந்துதன் தோற்றத்தை இழந்து
ஐயகோ! நெஞ்சம் குமைந்தாள்

வெள்ளையன் விலங்கிட விழியெலாம் கலங்கிட
வெந்தனள் நெஞ்சினில் நம்தாய்
துஞ்சிய தம்குடி விழிக்குமோ என்றெண்ணி
துடித்தனள் வெயில்படு எறும்பாய்!

முன்னவர் பெருமையும் முடிமன்னர் செல்வமும்
முடங்கின பரங்கியன் குடைகீழ்,
பின்னவள் பிள்ளைநாம் பீடுடன் நிமிர்ந்திட
மீண்டனள் தாயவள் நொடியில்!

சிட்டுக் குருவியும்  கூட்டமாய் சீறிட
சிறுநரி நிற்குமோ முன்னால்?
ஒற்றுமை பலமென உலகமே கற்றது
ஓங்கிய பாரதர் நம்மால்!

சுதந்திர பாரதம் சொர்க்கமாய் திகழ்ந்திட
எத்துனை ஆசைகள்  கொண்டோம்?
சுற்றும் இப்பூமியும் இந்தியன் பேர்சொல்ல
நிற்றிடும் கனவுகள் கண்டோம்!

ரத்தமும் வேர்வையும் வேரிலே சொரிந்துநம்
முன்னவர் மூத்தவர் பலரும்,
காத்திட்ட சுதந்திர பயிரிது - எருமைகள்
மேயந்திடத் தகுதலோ சொல்வீர்!

கனவுகள் கண்டிட கண்மட்டும் போதும்
கனவுகள் போதுமோ வெல்ல
காரியம் நடந்திட ஊக்கமும் வேண்டும் - நல்
உள்ளமும் வேண்டும் நம்முள்ளே

சுயநலம் சூதுநம் தேசத்தை அழித்திட
துஞ்சுதல் ஞாயமோ சொல்மின்!
எளியவர் வாழ்த்திட கொடியவர் வீழ்ந்திட
இளைஞரே துணிந்துநீர் நில்மின்!

வறியவன் வீழவும் வலியவன் வாழவும்
படைத்ததோ இப்பெரும் ஞாலம்?
யாவர்க்கும் யாவையும் கிடைத்தலே யன்றி - நாம்
அடைந்திட உயர்நிலை இல்லை

அகண்ட இப்பாரதம் அடங்கிய யாவரும்
சோதரர் என்றே முழங்கு..!
வலியநம் இளைஞர்கை ஒருமித்தே விரியும்கால்
வானமும் வசப்படும் விளங்கு..!




Comments

  1. Naan Romba Naala ethirpaartha Kavidhai Writer Anna.....
    Nice, Vaazhthukkal Writer Anna............

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அழிவின் ஞானம்

கனவுலகம்

Be Present