மூன்று வகையான தோல்விகள்
பொதுவாக நாம் அனைவரும் வெற்றி-தோல்வி என்பதை புறப்பொருட்கள் சார்ந்தவை என்றே பழக்கிவைக்கப்பட்டிருக்கிறோம். புறப்பொருள் வெற்றி என்பது அவ்வக்கணங்களில் குதூகலத்தையோ துயரத்தையோ அளிக்கும் என்றாலும் நீண்ட நோக்கில் அவற்றிற்கு பெரிய மதிப்பு ஏதும் இல்லை. 'உண்பது நாழி உடுப்பது இரண்டு' என்பதும் 'மண்ணாள்பவர் ஆயினும் முடிவில் ஒரு பிடி சாம்பல்' என்பதும் நம் முன்னோர் வாக்கு. இவைகளைச் சுற்றி நம் வாழ்வை வடித்துக் கொண்டோம் எனில் வாழும் காலத்திலேயே நம் வாழ்க்கை பொருளற்றதாகிவிடும். பணம், பொன், பதவி இவை யாவும் வாழும் காலத்தில் நமக்கு உபயோகமான கருவிகள்தாம் எனினும் அவையாவும் நம் வாழ்க்கைக்கு எவ்வகையிலும் பொருள் தருவதில்லை. பாலவயதில் சிறுவர் பூங்காவிற்கு நாம் அனைவரும் சென்றிருப்போம். அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தையும் நம் ஒத்தவர்களுடன் சேர்ந்து குதூகலமாக அனுபவித்திருப்போம். அப்பொழுதெல்லாம் அந்த உபகரணங்களை நாம் நமக்கானது என்று உரிமைக் கொண்டாடினோமா? நம் வீட்டுக்கு அவற்றை கொண்டு சென்று நமக்கானவை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினோமா? மாறாக அப்பொருட்களை அந்நிலையிலேயே அனுபவிக்க மட்ட...