Posts

மாரியம்மன் கோயில் தெரு மாயவினாயகர் மகாத்மியமும் 90's கிட்ஸ் வாழ்க்கையும்

Image
ஒரு செப்டம்பரின் மாலை நேரம், அனேகமாக  1996 ஆக இருக்கலாம். சந்தைத் தோப்பு மைதானத்தில் நானும் தெரு நண்பர்களும் கிரிக்கெட் விளையாடிக்  கொண்டிருந்தோம். விளையாட்டு தொடங்குவதற்கு முன்பான பேச்சு ராஜவீதிப் பையன்கள் வைக்கும் பிள்ளையார் சிலை குறித்தானதாக இருந்தது. ராஜவீதியின் குடும்பங்கள் ஓரளவு வசதியானது. அவர்களில் பெரும்பாலோர் பெங்களூரில் சொந்தங்களைக் கொண்டவர்கள். அவர்களின் பிள்ளையார் சிலை வைக்கும் பழக்கம் பெங்களூர் நகரத்தில் இருந்து வந்ததாக இருக்கலாம். அந்த பையன்களும் அவர்கள் வைக்கும் சிறிய பெயிண்ட் சிலைகள் பெங்களூரிலிருந்து வாங்கி வரப்பட்டதாகச் சொல்லுவார்கள். 3 நாட்களோ அல்லது 5 நாட்களோ தினமும் இரவில் பூசை செய்வார்கள். கடைசி நாள் சிலையை நன்கு அலங்கரித்து சைக்கிள் கேரியரில் வைத்து ஏதேதோ புரியாத கன்னட கோசங்களுடன் ஊர்வலம் வருவார்கள். கடைசியாக பிள்ளையார் கோயில் கிணற்றிலோ அல்லது அன்புபிரியாள் கோயில் கிணற்றிலோ சிலையைப் போட்டுவிட்டு பிரசாதம் தருவார்கள்.இந்த மொத்த நிழ்வுகளும் பெரியவர்கள் தலையீடின்றி சிறுவர்களே செய்வார்கள். "அவங்க எல்லா வீட்டிலயும் காசு வசூல் பண்றாங்கடா" என்று மணி சொன்னபோது...

மெஹர்

Image
பிரபஞ்சனின் யாசுமின் அக்கா சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கதை பாயம்மா. இஸ்லாமிய நெறி தவறாமல் இறையச்சத்துடன் வாழும் குடும்பம் பாயம்மாவினுடையது. ஒரு மகள். அவளுக்கு சில ஆண்டுகள் வயதில் இளைய ஒரு மகன். மகளின் திருமணம் தவிர அல்லாஹ்விடம் வேறு கோரிக்கை ஏதும் மெஹருக்கு (பாயம்மா) இல்லை. ஆனால் நகைக்கடை விற்பனையாளனான அவள் மகனின் சொற்ப வருமானத்தில் யாசுமினின் திருமணத்தை நடத்துவதா, ஒழுகும் வீட்டுக் கூரையை சரி செய்வதா? ஏழ்மை எப்போதும் விருந்தாளியாய் தங்கியுள்ள அந்த வீட்டில் எளிய ஆசைகளும் பெருங்கனவுதான். இறுதியாய் யாசுமினுக்கு ஒரு வரன் அமைகிறது. சேர்த்து வைத்த சிறிது நகைகள் நம்பிக்கை அளித்தாலும் ரொக்கம், நிக்காஹ் செலவு, நிக்காஹ்க்கு முன் கூரை வேய என பணத் தேவை கூடுகிறது. பாயம்மாவின் தன் துயரங்களை மகன் மேல் ஏற்றுகிறாள். அவன் வயதில் சிறியவன். தாயின் சுமைகளைத தான் சுமக்கும் அன்பு நிறைந்தவன். ஆனால் இந்த தொகை அவன் சத்துக்கும் மீறியதாயிற்றே?  மார்க்க வழி வந்த ஒழுக்கம், நேர்மை எல்லாம் அவன் தேவைகளுக்கு முன் மெதுவாய் கரைகிறது. அவன் நேர்மையின் மீது அபார நம்பிக்கை கொண்ட அவன் முதலாளியிடம் திருடுகிற...

தேடலின் மூலம்

Image
எங்கோத் தவறு.. எங்கு தவறு?  தெரியவில்லை இடம் தெரியாதத் தவறை தேடும்தோறும் அறியாத தவறுகள் பல அறியக் கிடைக்கின்றன.. அகற்றியபடி மேன்மேலும் தேடுகின்றேன் மூலமான அந்தத் தவறை.. நாளின் இறுதிவரை அது எங்கெனத் தெரிவதே இல்லை.. துயரில்லை தெரியாத அந்த தவறினால்தான் மேலும் மேலும் எம் தவறுகள் களையப்பட்டு யான் மேம்படுகிறேன்... எங்கோத் தவறு ஒன்று எப்போதும் வாழட்டும் ஏனெனில் அதைப் பிடித்துக் கொண்டே நான் ஆண்டவன் பாதம் தொடும் தூரம் வரைகூட சென்றுவிடகூடும்

கடந்து போதல்

Image
இந்த உலகம் கொஞ்சம் நல்லவர்களாலும் கொஞ்சம் கெட்டவர்களாலும் நிறைய என்னாலும் சூழப்பட்டுள்ளது.. இந்த உலகம் கொஞ்சம் அறிவாளிகளாலும் கொஞ்சம் முட்டாள்களாலும் நிறைய என்னாலும் நிறைந்துள்ளது இந்த உலகம் கொஞ்சம் கடவுளாலும் கொஞ்சம் சாத்தானாலும் நிறைய என்னாலும் ஆக்கப்பட்டுள்ளது என் இந்த உலகில் கொஞ்சம் பேரை நேசிக்கின்றேன் கொஞ்சம் பேரை வெறுக்கின்றேன் எஞ்சியுள்ள என்னை என்ன செய்வதென்று தெரியாமல் கண்டும் காணாது கடந்து போகிறேன்

உச்சத்திற்கும் அப்பால்

Image
மின்னலின் பேரொளி ஒன்றைப் பார்த்தபின் எங்கும் இருட்டை மட்டுமே அவன் பார்த்தான்.. இடியின் பேரோசை ஒன்றைக் கேட்டபின் எங்கும் மௌனத்தை மட்டுமே அவன் கேட்டான்.. அமுதின் பெருஞ்சுவை ஒன்றை சுவைத்தபின் அவன் சுவைத்தவை யாவும் சாரமற்றே இருந்தன.. பெரியவை என்பவை எல்லாம் எப்போதும் மேலும் அடைதலற்ற வெறுமையிலேயே முடிகின்றன என இறுதியாய் அவன் உணர்ந்தான்.. இப்போதெல்லாம் அவன் பெரியதை வெறுமனே அஞ்சி ஒதுங்குகிறான்..

கடந்து செல்லும் நிகழ்

Image
அந்தப் பழைய ஆல்பத்தைக் கையில் ஏந்தும் போதெல்லாம் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.. அது ஒரு காலப் பயணம் என் வீடு முன்பு இப்படித்தான் இருந்தது.. இது என் பழைய பள்ளி இது என் பழைய சட்டை இது எங்கள் பழைய வண்டி இது நாங்கள் வளர்த்த நாய் இவர்கள் என் பழைய நண்பர்கள் இது நான் சென்ற ஒரு பயணம் ஆல்பம் முடியும் போது ஒருமுறை பெருமூச்சு விடுகிறேன் என் இன்றைய நாளை நேசிக்க இது இன்னும்  எத்துனைப் பழையதாகும் வரை நான் காத்திருக்க வேண்டுமோ?

தவறுகளின் பொது வரலாறு

முதலில்அந்த தவறு, தவறு என்று தெரியாமல் யாராலோ தவறுதலாகத்தான் செய்யப்பட்டது.. பின்பு ஒரு நாள், யாரோ ஒருவன் அதற்க்கு தவறு என்று பெயரிட்டான். பெயரை அதன் மீதே எழுதியும் வைத்தான் பின்னர் அது வெகுநாட்களாய் தவறு என்ற பெயருடனேயே எல்லோராலும் செய்யப்பட்டு வரலானது. ஊருக்கு புதியவன் யாரேனும் ஒருவன் அதன் மீது எழுதப்பட்ட பெயரை உரக்க படித்துவிடுவது மட்டுமே சங்கடமாய் இருந்தது. ஒருவழியாய் தவறு எனும் பெயர்மீது பழுப்பு காகிதம் ஒட்டி பயன்படுத்தும் முறை பரவலானது. பழுப்புக் காகிதத்தை எவனும் கிழிக்காதிருக்க பாதுகாப்பும் போடப்பட்டபின் எல்லாம் இயல்பானது. பழுப்பு காகிதத்தின் உள்ளே என்ன உள்ளதென்று பாடங்கள் பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதுடன் தவறுக்கு பெயரிட்டவனின் வாழ்க்கை வரலாறும் விரிவாக கற்ப்பிக்கப்பட்டது. பாவம், முதன் முதலில் அதை செய்தவன் மட்டுமே அது தவறு என்று தெரியும் முன்னரே தவறிவிட்டான்..