தற்செயலாக நிகழும் பல விபத்துகளின் தொகை என வாழ்வை வரையறுக்கிறேன். தற்செயல்கள் அனைத்து தற்செயலாக மட்டும் நிகழ்வதில்லை. அவை ஒவ்வொன்றும் பல நூறு தற்செயல்களாலேயே நிகழ்கின்றன. பின்னோக்கி செல்ல செல்ல தற்செயல்களின் எண்ணிக்கை ஆயிரம் லட்சம் கோடி எனப் பெருகிக் கொண்டே இருக்கும். தற்செயல்கள் எனும் பேராற்றில் மிதக்கும் துரும்பென நம்மை உணரும் தருணம், இனியும் அவற்றை வெறுமனே தற்செயல் என அழைப்பது பொருத்தமல்ல எனத் தோன்றிவிடுகிறது. நமக்கே நமக்கென பல கோடி விசைகள் சேர்ந்து உருவாக்கும் பாதையில்தான் நம் அன்றாடம் நிகழ்கிறது, இதை மீறவோ, விலகவோ அனேகமாக வாய்ப்பில்லை எனத்தோன்றுகிறது. அன்றாடங்களில் வாழ்தலே அலாதி எனும் தெளிவும் கிடைக்கிறது. (சார், நீங்க பிலாசப்பிக்குள்ள போயிட்டீங்க!) அன்றாடங்களில் வாழ்தல் அத்துனை எளிதானதல்ல. நாம் நினைவுகளாலும், கனவுகளாலும் மற்றும் உணர்வுகளாலும் வாழவே பழகியிருக்கிறோம். அவற்றை கடந்து வருதல் மிகப்பெரும் முயற்சியைக் கோருவது. நம் நினைவுகள் நிறைவானவை ஆகும்வரை, நம் கனவுகள் நிஜமானவை ஆகும்வரை, நம் உணர்வுகள் சமநிலை கொள்ளும்வரை, அன்றாடங்களில் வாழ்கிறேன் என்று கூறுவதெல்லா...